பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 133

தத்துவங்களை அவருக்குக் கூறினார். ‘அறிவாளராகிய ஒருவர் தம் உள்ளுணர்வினாலே தமது ஆசிரியருடைய சித்தாந்தத்தை விரைவிலே தெரிந்துகொண்டு, அந்த நிலையில் நிலைத்து நிற்கும்படி என் சித்தாந்தம் எளிதாக இருக்கிறது’ என்று சொல்லி, அவருக்கு வேண்டிய விளக்கங்களையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறினார். கௌதமரும் மிகவும் விரைவிலே அந்தச் சித்தாந்தத்தைக் கற்று மனப்பாடம் செய்து ஓதிய பிறகு, அதன்படி நடக்கவும் ஆரம்பித்தார். அநுபவ பூர்வமாகக் குருவின் உபதேசங்களை அவர் கடைப்பிடித்து வந்தார்.

காலாமர் கூறியதாவது: ‘ஐம்பொறிகளின் மூலங்களாகிய ஐம்புலன்களின் செயல்களையும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவைகளையும்), மனத்தின் செயலையும் உய்த்துணரும் "நான்" என்பது எது? கைகளாலும், கால்களாலும் இயக்கம் ஏற்படக் காரணமானது எது? “நான் சொல்லுகிறேன்", “நான் அறிகிறேன்; உணர்கிறேன்”, “நான் வருகிறேன்", “நான் செல்கிறேன்", நான் இங்கே தங்குகிறேன்” என்ற கூற்றுக்களில் ஆன்மா குறிக்கப்பெறுகின்றது. உன் உடல் ஆன்மா அன்று; கண், காது, நாசி, நாக்கு, மனம் ஆகியவை ஆன்மா ஆகமாட்டா உடலின் தீண்டுகையை உணர்வது “நான்“. நாசியில் வாசத்தையும் நாவில் சுவையையும். கண்ணில் பார்வையையும், காதில் கேள்வி யையும், மனத்தில் உணர்வையும் உணர்வது “நான்.“ “நான்“ என்பதே கைகளையும், கால்களையும் இயக்குவது. அந்த “நான் தான் ஆன்மா. ஆன்மாவின் உண்மையைச் சந்தேகித்தல் மத சம்பிரதாயத்திற்கு விரோதம்; ஆன்மாவின் உண்மையை உணராமல் முக்தியில்லை. அநுமானத்தால் ஆழ்ந்த ஆராய்ச்சியில் இறங்கினால், உள்ளம் கலங்கி அவநம்பிக்கையே ஏற்படும். ஆனால், ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவதன் மூலம் விடுதலைக்கு வழி கிடைக்கும். ஜனக் கூட்டத்தை விட்டு விலகித் துறவு வாழ்க்கையை