பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 203

இப்போது சாரநாத்திலே முக்கியமாக உள்ளது மூல கந்தகுடி விகாரை. ஆசிய மகாபோதிக் கழகத்தார் பெரியகோபுரத்துடன் இந்த அழகிய விகாரையை அமைத்திருக்கின்றனர். உள்ளே தரையெல்லாம் சலவைக்கல்; சுவர்களிலே புத்தருடைய சரித்திர நிகழ்ச்சிகள் பல கண்கவரும் வருணச் சித்திரங்களாகத் தீட்டப் பெற்றுள்ளன. புத்தருடைய புனித அஸ்தியும் அங்கே உள்ளது. மூலகந்த குடி விகாரைக்கு அருகிலேயே சீனப் பெருமக்கள் நிறுவியுள்ள அழகு நிறைந்த புத்தர் கோயிலும் இருக்கின்றது.

மௌரிய சக்கரவர்த்தியாகிய அசோகர், ததாகதர் அமர்ந்து அறம் உணர்த்திய இடத்தில், அழகிய கல் தூண் ஒன்றை நிறுத்தியிருந்தார். இந்தத் தூண் பின்னால் உடைந்து போய்விட்டது. இதன் உச்சியில் அமைந்திருந்த சிங்க உருவம் இன்றும் பார்த்தவர்களைப் பரவசப்படுத்துவதாக விளங்குகின்றது. உபதேசம் செய்யும் பாவனையில் கை முத்திரையுடன் புத்தர் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கற்சிலை ஒன்றும், நிற்கின்ற பாவனை யிலுள்ள போதி சத்துவரின் உடைந்த சிலை ஒன்றும் சாரநாத்திலே இருக்கின்றன. மண்ணுள் புதைந்து கிடந்த வேறு பல கல்வெட்டுக்களும், சிலைகளும் அங்குள்ள பொருட்காட்சிச் சாலையிலே எடுத்து வைக்கப் பெற்றிருக்கின்றன.