பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதினான்காம் இயல்

நந்தன்[1]

‘எறும்புகடை அயன்முதலா
எண்ணிறந்த என்றுரைக்கப்
பிறந்திறந்த யோனிதொறும்
பிரியாது சூழ்போகி
எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும்
யாதொன்றால் இடர்எய்தின்
அவ்வுடம்பின் உயிர்க்குயிராய்
அருள்பொழியும் திருவுள்ளம்!”

- வீரசோழியம் உரை

தய சூரியனைப்போல் கபிலையம்பதியில் புத்தர் பெருமான் அறியாமை இருளை அகற்றி ஒளிபரப்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய அருமைத் தம்பியாகிய நந்தன், புதிதாக மணமாகியிருந்த தன் மனைவியுடன், தனது புதிய அரண்மனையின் மாடியிலே கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான். நந்தன் அழகிலே சிறந்த ஆடவர் திலகம் அவன் மனைவி சுந்தரி அழகிலே அவனுடன் போட்டியிடுபவளாக இருந்தாள். கற்பகத்தின் பூங்கொம்புபோல் விளங்கிய அவளுடைய உடலில் அணிந்திருந்த நவரத்தினங்கள் இழைத்த நகைகள் அவள் எழிலால் அழகு பெற்று விளங்கின. அவளைப் பார்த்தால் மலர்கள் நிறைந்த பூம்பொய்கையைப் பார்ப்பது போலிருக்கும். அவள் புன்னகையைக் கண்டு அன்னங்கள்


  1. இந்த இயல் மகாகவி அசுவகோஷர் இயற்றிய ‘சௌந்தரநந்தா’ என்ற அழகிய காவியத்தை ஆதாரமாய்க் கொண்டது.