பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292 ⚫ போதி மாதவன்

ஒவ்வொரு வேளையிலும் அவன் அவர் அருகே போய் இருந்து கொண்டு, ‘அளவறிந்து உண்பவர்கள் பிணியில்லாமல் நெடுங்காலம் இளமையோடு இன்புற்று. வாழ்வார்கள்’ என்று சொல்லிக் கொண்டேயிருக்கும்படி கூறி வைத்தார். இதை அநுசரித்துப் பகவர் ‘குமார திருஷ்டாந்த சூத்திரம்’ என்ற உபதேசத்தையும் செய்தார்.

அவ்வாறே சுதர்சனன் நாள்தோறும் சொல்லி வந்ததில் மன்னரும் பகவரின் அரிய வாக்கியத்தை நினைவு கொண்டு. மித உணவே அருந்தி வந்தார்; விரைவில் உடல் நலமும் பெற்றார்.

மடிமையே மனிதனின் பகைவன் என்பதைப் புத்தர் பெருமான் பல இடங்களில் வற்புறுத்தியுள்ளார். தீவிர முயற்சியும், தளராத உறுதியுமே மனிதனுக்கு உதவி யானவை என்பதை அவர் இடைவிடாது கூறிவந்திருக்கிறார். ‘கருத்துடைமையை நித்தியமான நிருவாண மோட்சத்திற்கு வழி. கருத்துடையவர் இறப்பதில்லை. மடிமையுடையவர் இருக்கும் போதே இறந்தவராவர்‘[1] என்பது அவருடைய மூல மந்திரங்களில் ஒன்று.

புத்தர் பெருமான் மழைக் காலத்தில் மூன்று மாதங கள் மட்டும் வேணுவனம், ஜேதவனம் போன்ற ஒரு விகாரையில் சீடர்களோடு தங்கியிருத்தல் வழக்கம். அது போல் அவர் போதியடைந்தபின் மூன்றாவது மாரிக் காலத்தில் ஜேதவனத்திலேயே தங்கியிருந்தார். புத்தர் தங்கியிருந்த விகாரைகளிலே ஜேதவனமே முதன்மை யானது.


  1. ‘தம்மபதம்’.