பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா-பரி-நிருவாணம் ⚫ 411

பயிற்சிப் படிகள் பிறருடைய முறைகளில் இல்லை யென்றும் புத்த தேவர் எடுத்துக் காட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது :

சுபத்திரா! மெய்ப்பொருளை நாடி நான் வெளியேறும் காலத்தில் எனக்கு வயது இருபத்தொன்பது. தரும ஸ்தாபனத்திற்காக நான் உலகைத் துறந்து, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கழிந்து விட்டன. (சமய வாழ்வில் பயிற்சி பெறும் துறவிகளுக்காக வகுத்துள்ள) நான்கு படிகளில் எந்தப் படியிலுள்ள துறவியும் இந்தத் தருமத்திற்கு வெளியேயில்லை. வாதப்போர் புரியும் புறச்சமயிகளிடையே இத்தகைய துறவிகள் இல்லை. ஆனால் இந்தத் தருமத்திலே பிக்குக்கள் நிறைந்த சீலத்துடன் வாழ்ந்து வந்தால், உலகத்திலே அருகத்துக்கள் இல்லாமற் போகமாட்டார்கள்’[1]

இறுதி உபதேசம்

அடுத்தாற்போல் பகவர் ஆனந்தரைப் பார்த்து, ‘ஆனந்தா! “ததாகதரின் உபதேசம் முடிந்துலிட்டது; இனிமேல் நமக்கு ஆசிரியர் எவருமில்லை! என்று உங்களில் சிலருக்குச் சிந்தனை எழக்கூடும். ஆனந்தா! இதை அவ்வாறு நீங்கள் கருதக்கூடாது. இனிமேல் எனக்குப் பிறப்பில்லை என்பது உண்மைதான்; ஏனெனில் இனி எத்தகைய துக்கமும் எனக்கு இல்லாதபடி ஒழிந்து விட்டது. இந்த உடல் மரித்த பின்பும், ததாகதர் இருந்தே வருவார். நான் தெரிவித்துள்ள தருமமும், உங்களனை வருக்கும் பொதுவான சங்கத்தின் விநய விதிகளும், நான் சென்ற பிறகு, உங்களுக்கு ஆசிரியராக இருந்து வரட்டும்!.......


  1. ‘தீக நிகாயம்.’