பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௬

பௌத்தமும் தமிழும்

நிலை குலையச் செய்துவிட்டது. பௌத்தக் கோயில்கள் ஜைனக்கோயில்களாக மாற்றப்பட்டன, அகளங்கர் என்னும் ஜைனர், காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே. ஆனால், பௌத்தத்தை வீழ்ச்சியடையச்செய்து ஜைனம் வெற்றிக்கொடி நாட்டிய போதிலும், பௌத்தம் முழுவதும் அழிந்துவிடவில்லை. வலிமையிழந்த நிலையில் அந்த மதம் தமிழ் நாட்டில் ஓரளவில் ஊடாடிக்கொண்டிருந்தது.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு, இதுகாறும் பின்னணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத்தொடங்கி, ஜைனமதத்தை வீழ்த்தி, உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான் பௌத்த மதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது,

வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப பிராமணர்மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடையதாயிருந்தபடியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாடு வந்த வைதீக பிராமண மதம், கி.பி. நான்காம், அல்லது ஐந்தாம் நூற்றாண்டு வரையில், பொதுமக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே