பக்கம்:பௌத்த தருமம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் இயல்

நான்கு வாய்மைகள்

‘சகல பாவங்களையும் நீக்குதல்,
நற் கருமங்களைக் கடைப் பிடித்தல்,
உள்ளத்தைச் சுத்தம் செய்தல்—
இது தான் புத்தருடைய உபதேசம்,’

—புத்தர்

புத்தர் பெருமான் போதித்து வந்த அறம் பௌத்த தருமம், அதை மதம், சமயம் என்று கூறுவதைப் பார்க்கிலும், அறம், அல்லது தருமம் என்று குறித்தலே அதிகப் பொருத்தமாகும். ஏனெனில் அது வாழ்க்கை முறை, அல்லது நெறியேயாம்.

பௌத்த தருமத்தில் பரம்பொருள், ஆன்மாக்கள், பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் ஆகியவை பற்றி விரிவான தத்துவநூல்கள் இல்லை, தருக்க சாத்திரங்களும் இல்லை. புத்தர் ஆண்டவனின் தூதரும் அல்லர்; அவரும் தம்மை அவ்வாறு கூறிக்கொள்ளவில்லை. அவர் மனிதராகவே பிறந்து, மனிதராகவே மறைந்தார். ஆனால் எத்தகைய மனிதர் ‘மெய்ஞ்ஞானம் பெறுவதற்கு முன் புத்தர்களும் சாதாரண மனிதர்களே; ஞானமடைந்தபின் சாதாரண மனிதர்களும் புத்தர்களே!’ என்று சீன அறிஞர் ஒருவர் கூறியுள்ளது போல், புத்தர் சாதாரண மனிதரல்லர், மெய்ஞ்ஞானம் பெற்ற அதியற்புத மனிதர்! அவருடைய உபதேசங்கள் யாவும் தலைசிறந்த ஒரு மெய்ஞ்ஞானி, மற்ற மக்களுக்காக அருள் சுரந்து அருளிய வழிகாட்டிகள் என்றே கொள்ளத்தக்கவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/20&oldid=1386757" இலிருந்து மீள்விக்கப்பட்டது