பக்கம்:பௌத்த தருமம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

33


நிருவான வழியிலே செல்வோன் எப்பொழுதும் கருத்தோடு இருக்க வேண்டும். புத்தர் பெருமானுடைய உபதேசங்களைப் பரிசீலனை செய்தால், ‘கருத்தோடு இருங்கள்! கருத்தோடு இருங்கள்!!’ என்று அவர் அடிக்கடி, ஓயாமல், கூறி வந்திருப்பது தெரியவரும். கருத்துடைமையை ‘அப்பமாதம்’ என்றும், கருத்தின்மையாகிய மடிமையைப் ‘பமாதம்’ என்றும் அவர் (பாலி மொழியில) குறித்து வந்தார். ‘அப்பமாதோ அமத பதம், பமாதே மச்சுநோ பதம் - கருத்துடைமையே நித்தியமான நிருவாண மோட்சத்திற்கு வழி, மடிமையே மரணத்திற்கு வழி’ என்று அவர் கூறியுள்ளார். மடிமையுடையவர்கள் -சோம்பேறிகள்-கருத்தில்லாதவர்கள் - உயிரோடிருந்தும் இறந்தவர்களே என்பது அவர் கருத்து. கருத்துடைமையில் களிப்படைய வேண்டும், அதிலேயே திளைக்கவேண்டும், அதுவே முதன்மையான அருந்தனம், கருத்தோடிருப்பவன் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டேயிருப்பான்; உடைமைகளிலெல்லாம் சிறந்தது ஊக்கமுடைமையே. அயர்வு அவனை அண்டாது; அவன் எப்போதும் விழிப்புடனிருப்பான். களிப்புடைமை, தெளிவான சிததம், இடைவிடாத முயற்சி ஆகிய இணையற்ற செல்வங்களைப் பெற்றவனே இறுதியில் வெற்றி காண்பான்.

அறிவாளி மடிமையில் ஆழ் தவர் நடுவே, முயற்சியுடையோனாகவும், உறங்குவோர் நடுவே விழிப்புள்ளவனாகவும் இருப்பான்; பந்தயக் குதிரை வாடகைக் குதிரையைப் பிந்த விட்டுவிட்டு முன்னேறிப் பாய்வதுபோல், அவன் மற்ற யாவார்க்கும் முன்னால் செல்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/36&oldid=1387300" இலிருந்து மீள்விக்கப்பட்டது