பக்கம்:பௌத்த தருமம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வாயு குண்டுகளால் சருவ நாசம் ஒருபுறம், அன்பு, நேசம், சகிப்புத்தன்மை, நல்லொழுக்கம் முதலியவற்றால் எல்லா நாடுகளையும் ஒரே உலகமாக ஒன்றுசேர்ந்துச் சாந்தியோடும், சமத்துவத்தோடும் வாழச் செய்தல் மற்றொரு புறம் – இந்த இரண்டு நிலைகளே இருக்கின்றன. உலகத்தை வாழவைக்கப் புத்தர் போதித்த அருளறம் இன்று மிகவும் பயன்படும். தனி, மனிதரோ, நாடோ, ‘நான், நான்’ என்று அகங்காரம் கொண்டிருக்கும்வரை அன்புக்கு இடமில்லை.

ஒரு துளி தண்ணீர் எக்காலத்திலும் காய்ந்து போய் விடமால் ‘காப்பது எப்படி?’ என்று ஒரு சமயம் புத்தர் சீடர்களை வினவினார். எவர்க்கும் வழி தெரியவில்லை. பெருமானே வழியையும் தெரிவித்தார்: ‘அதைக் கடலுள் சேர்ப்பதால்!’ உண்மைதான். மனிதன் தன்னை மானிட சமூகமாகிய கடலுள் சேர்த்துக் கொள்ளாவிட்டால் வரண்டுதான் போவான்.

இந்நூலைப் படிக்கு முன்னால் தெரிந்து கொள்ள வேண்டிய புத்தருடைய திவ்விய சரிதையைப் ‘போதி மாதவன்’ என்ற நூலாக எழுதியுள்ளேன். அவர் உபதேசங்களும் தனி நூல்களாக வெளிவந்துள்ளன. உலகில் தோன்றிய ஆறு தீர்க்கதரிசிகளிடையே பெருமானின் நிலை பற்றிப் ‘புத்த ஞாயிறு’ என்ற நூலில் விவரித்துள்ளேன். அவரைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்ட பின்பு இந்நூலைப் படித்தல் பெரும் பயனாகும்.


ப. ராமஸ்வாமி
நெல்லை



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/8&oldid=1386755" இலிருந்து மீள்விக்கப்பட்டது