பக்கம்:பௌத்த தருமம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பெளத்த தருமம்


வேண்டும். நண்பர்களாகத் துணைக்கு இருப்பவர்களும் நேர்மையாளராக இருக்க வேண்டும். மூடர்கள், தீயவர்கள் உறவை அறவே நீக்கிவிட வேண்டும்.

5. மனனம்: சிந்தனைகள், மன உணர்ச்சிகள், புலன்களின் உணர்வுகள் முதலியவற்றில் தெளிவோடும் அமைதியோடும் இருப்பது மனனம். இதற்கு உடலையும் உள்ளத்தையும் தக்க நிலையில் வைத்திருக்க வேண்டும். உணவை முறைப்படுத்த வேண்டும். உயிர் வதைக்குக் காரணமாயில்லாத தானியங்கள், கனிகள், பால், தயிர், வெண்ணெய், நெய் முதலியவற்றை உண்ணலாம், எதிலும் மிதமா யிருக்கவேண்டும். வசிக்கும் இடமும், சூழ்நிலையும் சாந்தி நிறைந்திருத்தல் நலம்.

6, சமாதி: உன்னதமான சிந்தனைகளை வளர்த்துப் பயிற்சி செய்து கொண்டு தியான முறைகளில் பழகி வந்தால், சமாதி நிலையைப் பெறமுடியும். ஆணவக் காட்டைக் களைந்து, அகங்காரத்தை ஒழித்து, பாவ கருமங்களை விலக்கி, உள்ளத்தைத் திருத்தி, அன்பு நீர் பாய்ச்சி வந்தால் உபசாந்தி கைகூடும்.

7. உபேட்சை: இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் மதியாமல், விருப்பு வெறுப்பற்று, எல்லாவற்றையும் சமமாகப் பார்த்து வரும் நிலை உபேட்சையாம். செருக்கு, வெகுளி, அழுக்காறு, அவா முதலிய யாவற்றையும் அந்நிலையில் இடம் பெறாமல் ஒதுக்க வேண்டும். பொறுமைக்கு நிலைக்களனாக விளங்க வேண்டும். நண்பர், பகைவர் என்ற வேற்றுமை யின்றி யாவரிடத்தும் அன்பு கொண்டு, கைம்மாறாக எதையும் விரும்பாமல் பிறருக்கு உதவிகள் செய்து வருதல் இந்தப் போத்தியாங்கத்திற்கு ஏற்றதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/87&oldid=1386939" இலிருந்து மீள்விக்கப்பட்டது