பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

105

நகரம். அதன் பழமையை நினைத்து கண்ணபிரானே அதற்கு ‘இந்திரப் பிரத்தம்’ -என்றும் பெயர் சூட்டினார்.

பெரிய தந்தை தவறாக எண்ணிக் கொள்ளாதவாறு அவரிடமும் சகோதரர்களிடமும் ஏனைப் பெரியோர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு மங்கல நிறைவு செறிந்த ஓர் நல்ல நாளில் இந்திரப்பிரத்த நகரத்துக்குக் குடியேறினர். வனப்பிலும் அழகிலும் நிகரற்ற அந்த மகாநகரத்தைப் படைத்துக் கொடுத்தவனாகிய தேவதச்சன் நகரத்தின் அமைப்பையும் எழிலையும் பாண்டவர்கட்கும் மற்றை யோர்க்கும் விளக்கிக் கூறினான். நகரம் முழுவதையும் சுற்றிக் காண்பித்தான். தேவதச்சனாகிய விஸ்வகன்மா, இந்திரன், கண்ணபிரான் ஆகியவர்களுக்குக் கொடுத்த வாக்கின்படியே அந்த நகரத்தைப் பாண்டவர்க்காக உண்டாக்கிக் கொடுத்திருந்தான் என்றாலும் தாங்கள் நன்றி செலுத்த வேண்டிய முறையைக் கருதி அவனுக்குப் பெரும் பரிசில்களையும் அன்பளிப்புகளையும் வழங்கினார்கள் தருமன் முதலிய சகோதரர்கள். பாண்டவர்கள் இந்திரப்பிரத்த நகரைத் தங்கள் தலைநகரமாக அமைத்துக் கொண்டு சில நாட்கள் கழிந்தன. நகர் புகு விழாவுக்காக வந்திருந்த கண்ணபிரான் முதலிய விருந்தினர் பாண்டவர்க்கு நல்லாசி கூறி விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்கள் தலைநகரை அடைந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல அது புதுமையாகத் தோன்றிய நகரம் என்ற நினைவே மறந்து விட்டது. ஊழி ஊழியாக வாழ்ந்து பழகிப்போன நகரம் போன்ற மனோபாவம் பாண்டவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த மனோபாவத்தோடு மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

முடிசூடிக் கொண்டிருந்த தருமன் அறக்கடவுளே அரியணையில் அமர்ந்து முயன்று அரசாள்வது போலச் செம்மை பிறழாத ஆட்சியை நடத்தி வந்தான். ஒரு தாய் தன் அன்புக் குழந்தைகளைப் பேணிப் போற்றும் தன்மை போலத் தாய் ஒத்த அன்பும் தவம் ஒத்த பண்பும் கொண்டு தனக்குக் கிடைத்த நாட்டைத் தம்பிமார்களோடு நிர்வகித்து வந்தான்.