பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

145

இப்போதிருப்பது போல் உன்னிடம் வந்து சேர்வார்கள். அல்லது உன்னைக் கடுமையாக எதிர்க்கும் விரோதிகளாக மூன்று பிறவிகள் பிறந்து மீட்சி பெறுவர். இவ்விரண்டு வழிகளில் இவர்கள் எதை விரும்புகின்றார்களோ அதை மேற்கொள்ளலாம்” என்றார் துருவாசர்.

உடனே திருமால், “காவலர்களே! முனிவர் கூறிய இவ்விரண்டு வழிகளில் எதைப் பின்பற்றி நீங்கள் சாபமீட்சி பெறப் போகிறீர்கள்? உங்கள் விருப்பம் யாது?” -என்று தம் காவலர்களை நோக்கிக் கேட்டார்.

“கருணைக் கடலாகிய பெருமானே! உன்னைத் துறந்து ஏழு பிறவிகள் தனித்து வாழ எங்களால் இயலாது. உன் பிரிவை நாங்கள் ஆற்றோம். எனவே மூன்று பிறவிகள் பகைவர்களாகப் பிறந்தே உன்னை அடைவோம்.” காவலர்களின் மறுமொழி திருமாலைப் பெருமிதம் கொள்ளச் செய்தது.

துருவாச முனிவரும் மூன்று பிறவிகளிலேயே அவர்களுக்குச் சாபமீட்சி கிடைக்கும்படி செய்தார். காவலர்கள் மண்ணுலகில் சென்று பிறந்தனர். முதற் பிறவியில் ‘இரணியன், இரணியாக்கன்’ என்ற பெயரிலும், இரண்டாம் பிறவியில் ‘இராவணன், கும்பகர்ணன்’ என்ற பெயரிலும் மூன்றாம் பிறவியில் ‘கம்சன், சிசுபாலன்’ என்ற பெயரிலும் முறையே இந்தக் காவலர்கள் மூன்று பிறவிகளிலும் திருமாலுக்குப் பகைவர்களாகத் தோன்றினர். சிசுபாலன் இறந்ததும் அவன் உயிர் கண்ணபிரான் திருவடிகளை ஒளியுருவிற் சென்று அடைந்ததற்குக் காரணம் இது தான்!” இவ்வாறு வியாசமுனிவர் விளக்கம் கூறி முடிக்கவும் திருமாலின் அவதாரமே இந்த கண்ணபிரான்‘ -என்றெண்ணி எல்லோரும் அவரைக் கைகூப்பி வணங்கினர். இவ்வளவும் நிகழ்ந்து முடிந்தபின் துன்பத்தை அனுபவித்துப் பெறுகின்ற இன்பத்தின் சுவையைப் போல இறுதியாகக் கண்ணபிரானை அமரச் செய்து அவருக்கே முதல் வழிபாடு செய்தான் தருமன். யாருடைய மறுப்புமில்லாமல் ஒருமித்த மகிழ்ச்சியுடனே

அ.கு. - 10