பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200
அறத்தின் குரல்
 

காகக் காமிய வனத்திற்குப் புறப்பட்டு வந்தனர். வந்த வேந்தர்களும் நண்பர்களும் பாண்டவர்களை இக்கதிக்குள்ளாகிய துரியோதனாதியர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற மனக் கொதிப்புடனிருந்தனர். எல்லோருமாக சேர்ந்து படையெடுத்துச் சென்று கெளரவர்களின் குலத்தையே நிர்மூலம் செய்து பாண்டவர்களுக்கு அரசாட்சி நல்கிவிடத் தயாராயிருந்தனர். பாண்டவர்களைக் காண்பதற்காக காமிய வனத்திற்கு வந்திருந்த கண்ணபிரான் அந்த மன்னர்களின் சினத்தை ஆற்றினார்.

“பாண்டவர்கள் மேல் அனுதாபமும் ஆதரவும் காட்டுகின்ற மன்னர் பெருமக்களே! உங்கள் சினமும் ஆத்திரமும் நியாயமானவை என்பதை நானும் அறிவேன். எது எப்படியிருந்தாலும் நாமெல்லோரும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். சான்றோர்களும் ஆன்றோர்களும் நிறைந்த பேரவையில் வனவாசம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றான் தருமன். இப்போது நாம் போர் மேற்கொள்வது தருமனுடைய வாக்குக்கு முரணானது. எனவே பாண்டவர்கள் வனவாச காலம் முடிந்த பிறகு ஏற்படப் போகிற பெரும் போரின் போது உங்கள் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்போது நீங்கள் காட்டுகிற ஆத்திரத்தையும் சினத்தையும் அப்போது காட்ட முன்வர வேண்டும்.” கண்ணபிரானின் இந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு மன்னர்கள் சினந்தணிந்தனர். இதன்பின் தருமனுக்கென்று சில செய்திகளைத் தனியே கண்ணபிரான் கூறினார்.

“தருமா! வனவாசத்துக்காகக் குறித்த ஆண்டுகளில் நீயும் தம்பியரும் மறைவாக இருக்க வேண்டியது முக்கியம். வனவாசத்திற்குரிய நிபந்தனைகளில் அதுவும் ஒன்றல்லவா? உங்களுடைய புதல்வர்கள் யாவரையும் அங்கங்கே இருக்கும் சுற்றத்தினர் வீடுகளில் வசிக்குமாறு ஏற்பாடு செய்து விடு. தாயையும் அம்மாதிரியே எங்காவது தங்கி வாசிக்கச் செய்வது, நல்லது. அவ்வாறன்றி அவர்களையும் வனத்துக்கு அழைத்துக்