பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
224
அறத்தின் குரல்
 

செய்யும் பொருட்டு அவர்களைப் பிரிந்து சென்றிருக்கிறான். ஆனால் தருமன் முதலியவர்கள் இன்றிருக்கும் நிலை வேறு. அன்றிருந்த நிலை வேறு. அன்று அரசும் அரசாட்சியுமாக இருந்ததனால் அர்ச்சுனனுடைய பிரிவு அவர்களை அதிகம் வருத்தவில்லை. இன்றோ காட்டில் தனிமை அவர்களுக்கு அவன் பிரிவை உணர்ந்து வருந்தும்படியான நிலையை அளித்திருந்தது. தங்களில் அறிவும் வலிமையும் அழகும் ஒருங்கமைந்த சகோதரன் ஒருவன் எங்கோ கண்காணாத இடத்திற்குப் போய்விட்டானே தவம் செய்வதற்காக! -என்றெண்ணிக் கலங்கினர். அவர்களுடைய கலக்கத்தைத் தணிப்பதற்கென்றே வந்தவர் போல இந்திரனால் அனுப்பப்பட்ட உரோமேசர் என்ற தூதர் அப்போது அங்கே வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததுமே அவர் ஏதோ நல்ல செய்தியைக் கூறுவதற்காகவே வந்திருக்க வேண்டுமென்று பாண்டவர்களும் திரெளபதியும் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வயது மூத்தவராகவும் சான்றோராகவும் இருந்த அவரை அவர்கள் மரியாதையாக வணங்கி வரவேற்றனர். உரோமேசர் புன்முறுவல் பூத்த முகத்தோடு அவர்களுக்கு ஆசி கூறி அன்பு பாராட்டினார். பின்பு தாம் இந்திரனால் அனுப்பப்பட்ட செய்தியையும் அர்ச்சுனனைப் பற்றிய விவரங்களையும் கூறத் தொடங்கினார், தருமன் முதலிய சகோதரர்களும் திரெளபதியும் ஆவலோடு கேட்டனர். அர்ச்சுனன், நிவாதக்கவசர்களையும் காலகேயர்களையும் தன் ஆற்றலால் அழித்து வெற்றிக் கொண்டான் என்பதைக் கேள்விப்பட்ட போது அவர்களுக்குப் பெருமிதம் ஏற்பட்டது. தேவர்களுக்கும் உதவி செய்யக் கூடிய அளவிற்குத் தன் தம்பியினுடைய வீரம் சிறந்தது என்று தருமன் இறும்பூது கொண்டான். உரோமேசர் பாண்டவர்களைப் பல புண்ணியத் தீர்த்தங்களில் நீராடலாம் என்று கூறி யாத்திரையாக அழைத்துக் கொண்டு சென்றார். அப்படியே பாசுபதம் பெற அர்ச்சுனன் அமர்ந்து தவம் செய்த