பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/237

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
235
 


ஒரு நாள் காலை திரெளபதி ரிஷிபத்தினிகளோடு வனத்திலுள்ள பொய்கையில் நீராடுவதற்காகச் சென்றாள். பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்போது முன்பொரு முறை கண்ட தெய்வீக மலரைப் போன்ற ஒரு மலர் நீரில் மிதந்து வரக் கண்டாள். முன்பு கண்ட பொற்றாமரை மலரைக் காட்டிலும் சிறந்த மணமும் நல்ல அமைப்பும் உடையதாக இருந்தது இம்மலர். பெண்களுக்கு மட்டும் ஒரு பொருளின் மேல் மனப்பற்று ஏற்பட்டு விடுமானால் அந்தப் பொருளை எப்படியும் அடைந்தே தீர வேண்டும். அடைந்தாலொழிய அந்தப் பற்றுத் தீராது. ஆசை பிறக்கும்போதே உறுதியும் பிறந்து விடுகின்றது அவர்களுக்கு. திரெளபதி மறுபடியும் வீமனை அணுகினாள். அவன் மறுக்க முடியாதபடி தன் ஆசையை வெளியிட்டாள். வீமன் மனம் நெகிழ்ந்து விட்டது. அன்பையெல்லாம் கொள்ளைக் கொண்ட பெண் கட்டளையிடுகிறாள். ஈரநெஞ்சுள்ளவன் மறுப்பதற்கு எப்படித் துணிவான்? மீண்டும் யாரிடமும் கூறாமல் அளகாபுரியை நோக்கிப் பிரயாணம் செய்தான்.

இப்போது அளகை நகரம் அவனுக்குக் கொல்லைப்புறத்து வீடு போல. யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் துணிவோடு அளகையிலுள்ள பூஞ்சோலையை நெருங்கினான். தனக்கு எதிரிகள் எவரும் இருக்கின்றனரோ என்று அந்த நகரத்தை நோக்கிக் கேட்கும் பாவனையில் சங்கை எடுத்து முழக்கம் செய்தான். நகரத்தையே கிடுகிடுக்கச் செய்த அந்தச் சங்கநாதம் அளகாபுரி முழுவதும் கேட்டது. பூஞ்சோலையைக் காவல் காத்துக் கொண்டிருந்தவர்கள் முன்போலவே போருக்கு ஓடிவந்தனர். ஆனால் அருகில் நெருங்கி நிற்கின்ற ஆளைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப்பின்வாங்கினர். அவ்வாறு பின்வாங்கியவர்களில் ஒரு வித்தியாதரன் ஓடோடிச் சென்று குபேரனின் சேனாதிபதியாகிய மணிமான் என்பவனிடம் செய்தியைக் கூறினான். தன் வீரத்தின் மேல் தேவைக்கு மீறிய நம்பிக்கை உடையவன் மணிமான், குபேரனிடம் தெரிவிக்காமலே வந்திருக்கும்