பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
266
அறத்தின் குரல்
 

மறைந்து வாழ்ந்து வரும் பொழுது அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்கென்றே கிளம்பியவன் போல் இன்னொரு மனிதன் கிளம்பினான். அவன்தான் கீசகன். கீசகன் விராடனின் படைத் தளபதி. பார்ப்பதற்குக் கவர்ச்சி நிறைந்த தோற்றத்தை உடையவன். விராட மன்னனின் கோப்பெருந்தேவியாகிய சுதேஷ்ணை என்பவளுக்குச் சகோதரன். இந்த உறவால் விராடனுக்கு மைத்துனன் முறை உடையவன். இந்த உறவு முறை அல்லாமலும் விராட மன்னனின் முழு அன்புக்குப் பாத்திரமானவன். இவன் அடிக்கடி தன் சகோதரியாகிய சுதேஷ்ணையின் அந்தப்புரத்திற்கு வந்து அவளோடு உரையாடிச் செல்வது வழக்கம். விரதசாரிணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருந்த திரெளபதி தன்னால் இயன்றவரை எந்த ஆடவர் கண்களிலும் தென்படாமல் மறைவாகவே வாழ்ந்து வந்தாள். ஆனால் ஒரு நாள் அவளை அறியாமலே அவளுடைய விரதத்திற்குப் பங்கம் நேர்ந்து விட்டது.

சுதேஷ்ணையின் அந்தப்புரத்தில் பலவகை மலர்கள் பூத்துச் செழிப்புடன் விளங்கும் பூஞ்சோலை ஒன்று இருந்தது. அந்தப்புரத்திற்குள் வந்து போகின்றவர்கள் இந்தப் பூஞ்சோலைக்குள் நுழையாமல் வந்து போவதற்கில்லை. ஒரு நாள் காலை, மாலை தொடுப்பதற்காகப் பூஞ்சோலையில் மலர் கொய்து கொண்டிருந்தாள் திரெளபதி. அப்போது கீசகன் அந்த வழியாக வந்தான். அவள் மலர் கொய்து கொண்டிருப்பதை அவன் பார்த்து விட்டான். இயற்கையிலேயே சஞ்சல சுபாவம் நிறைந்த மனம் அவனுக்கு. கண்டவர்களை மயங்க செய்கின்ற அந்த அழகு, சபலம் நிறைந்த அவன் மனத்தைத் தடுமாறச் செய்துவிட்டது. அப்படியே சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் அவளை நோக்கினான். பூஞ்சோலையில் மற்றும் சில தோழிப் பெண்கள் வேறு ஓர் இடத்தில் மலர் கொய்து கொண்டிருந்தார்கள். கீசகன் அவர்களை அணுகி “இவள் யார்? இந்தப் புதுப்பெண் எவ்வளவு நாளாக இங்கே ஊழியம் செய்கிறாள்” என்று கேட்டான்.