பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
316
அறத்தின் குரல்
 

கொண்டு துரியோதனன் அவைக்குப் புறப்பட்டான். துரியோதனனுடைய அவை அன்று கோலாகலமாகக் கூடியிருந்தது. கண்ணன் அங்கு வருவதற்கு முன்பே அவையிலிருந்தவர்களுக்கு ஒரு கட்டளையை வற்புறுத்தி இட்டிருந்தான் துரியோதனன்; “கண்ணன் அவைக்குள் நுழைந்ததும் அவையிலுள்ள எவரேனும் எழுந்திருந்தோ, வரவேற்றோ, எதிர்கொண்டு வணங்கியோ மரியாதை செய்தால் அவர்கள் வாழுமிடம் தீ வைத்து அழிக்கப்படும். கண்ணனுக்கு யாரும் மரியாதை செய்யக் கூடாது.” கண்ணன் தனியனாக அந்தப் பேரவைக்குள் நுழைந்தான். துரியோதனனுக்குப் பயந்து பெரும்பான்மையானவர்கள் மரியாதையும் வரவேற்பும் செய்யாமல் இருந்த இடத்திலேயே இருந்து விட்டனர். ஆனால் விதுரன், வீட்டுமன், முதலியவர்கள் அவனுடைய அசட்டுக் கட்டளையைப் பொருட்படுத்தாமல் கண்ணனை எதிர் கொண்டழைத்து வணங்கி வரவேற்றனர். துரியோதனன் தன் அரியணையிலிருந்து எழுந்திருக்கவுமில்லை. “கண்ணா உட்கார்!” என்று மரியாதைக்குக் கூடச் சொல்லவில்லை. கண்ணன் தானாகவே ஓர் ஆசனத்தில் உட்கார்ந்தான்.

“நான் அரசாளும் தலைநகரத்திற்கு நீ நேற்றே வந்திருக்கிறாய்! ஆனால் என் வீட்டுக்கு வந்து விருந்தாளியாகத் தங்கவில்லை. இது என்னை நீ வேண்டுமென்றே அவமதித்ததாகும்” என்று இரைந்து கத்தினான் துரியோதனன்.

“துரியோதனா! அழைத்தால் தானே விருந்தினர்கள் வந்து தங்குவார்கள்? நான் இந்த நகரத்திற்கு வந்திருப்பது தெரிந்தும் நீ என்னை இலட்சியம் செய்யவில்லை. விதுரன் முதலியவர்கள் என்னை விரும்பி வரவேற்றார்கள். ஆகையால் தான் அங்கு விருந்தினனாகத் தங்கினேன்.”

“இது போலிக் காரணம்! உண்மையில் நீ என்னை அலட்சியம் செய்கிறாய். வேறொன்றும் இல்லை."