பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/391

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நா. பார்த்தசாரதி
389
 


பரவிவிட்டது. களத்தில் போர் புரிந்து கொண்டிருந்த அபிமன்னனுக்குச் சினம்பொங்கி விட்டது. “அரவானைக் கொன்ற கௌரவர் படையை அழித்துச் சாம்பலாக்கி விடுவேன்” -என்ற உறுதியோடு போரில் ஈடுபட்டான் அவன். வீமனும் அடக்க முடியாத மனக் கொதிப்போடு போர் செய்தான். துரியோதனனும் அவனுடைய தம்பிமார்களும் வீமனின் எதிரே போருக்கு நின்று கொண்டிருந்தார்கள்.

“ஏ! துரியோதனா? இது வரை பலமுறை இதே போர்க்களத்தில் எனக்கு எதிராக நீ நின்று போர் செய்திருக்கிறாய். என்ன பயன்? தோற்று ஓடியிருக்கிறாயே ஒழிய, ஒரு முறையாவது நீ என்னைத் தோற்கச் செய்திருக்கிறாயா? நீ தனியாகப் போருக்கு வராமல் உன்னோடு உன் தம்பிமார்களையும் அழைத்துக் கொண்டு வருகிறாய் என் கை அம்புகளால் சாவதற்கென்றே உன் தம்பிமார்கள் உன்னோடு வருகிறார்கள். ஏற்கனவே பதின்மூன்று தம்பியர்களைக் கொன்றாய்விட்டது. இப்போது ஓர் ஏழு பேரையாவது கொல்லலாமென்று நினைக்கிறேன். நீ உண்மையான வீரனானால் உன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியுமானால் அவர்களைக் காப்பாற்றிக் கொள்...” என்று துரியோதனனை நோக்கி அறைக்கூவி விட்டுப் போரைத் தொடங்கினான். சொல்லிய சபதத்தின் படியே கால் நாழிகையில் வரிசையாக இன்னும் ஏழு தம்பியர்கள் இறந்து போகும்படி செய்தான் வீமன். இறப்பின் எண்ணிக்கை இருபது ஆயிற்று. துரியோதனன் ஆத்திரம் நிறைந்த விழிகளால் வீமனைப் பார்த்தான். பார்ப்பதைத்தவிர அவனால் வேறென்ன செய்ய முடியும்?

“அப்பா துரியோதனா! உனது பாவத்தின் பயன்களை இதுவரை பார்த்தது போதுமா? இனிமேலும் உயிரோடு இருந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? உன் ஆசை தீர்ந்து விட்டதானால் உன்னுடைய இருபது தம்பியர்களும் எந்த இடத்திற்குப் போனார்களோ அதே இடத்திற்கு உன்னையும் அனுப்பி விடுகிறேன். இன்னும்