பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

497


தனக்குத் தேர் ஓட்டியாக இருப்பதற்குச் சல்லியன் இணங்கிய செய்தி தெரிந்ததும் கர்ணன் முன்பு இந்திரனுக்கு அளித்து இழந்த கவச குண்டலங்களைத் திரும்பப் பெற்றது போலக் களிப்புக் கொண்டான். கர்ணனுடைய தேரில் அழகிய உயர்ந்த சாதிக் குதிரைகளைப் பூட்டித் தயார் செய்து கொண்டபின் தேரோட்டியின் ஸ்தானத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான் சல்லியன். படைகள் போருக்கு ஏற்ற முறையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. போரில் தனக்கு வெற்றிகளும், நலங்களும், விளையவேண்டுமென்று போர் ஆரம்பிப்பதற்கு முன்னால் பலதான தருமங்களைச் செய்தான். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் எல்லோரும் கர்ணனிடமிருந்து தானம் பெற்றுத் திருப்தி கொண்டனர். போர் தொடங்குவதற்கு முன்னால் கர்ணன் சல்லியனுக்குச் சில வீர உரைகளைக் கூறினான். “சல்லியா! நீ தேரோட்டியாக அமைந்தது என்னுடைய பெரும் பாக்கியம். எனக்கு வெற்றி கிடைப்பதற்கு ஒரு சிறந்த நன்னிமித்தம். பகைமையை நாசம் செய்யக் கூடிய சக்தி வாய்ந்தவில் என்னிடம் இருக்கிறது. அர்ச்சுனனைக் கொல்வதற்கென்றே சக்தி மிக்க நாகாஸ்திரத்தை என் வசம் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைய யுத்தத்தில் எல்லா வெற்றிகளும் நம் பக்கமே நிகழ்வதற்குரிய வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கண்ணபிரானை விடச் சிறந்தவனாகிய நீயே எனக்குத் தேரோட்டியாக அமைந்திருக்கிறாய்!”

கர்ணன் சல்லியனிடம் பேசிய பேச்சில் தற்பெருமை நிறைந்திருந்தது. ஏற்கெனவே கர்ணனைப் பற்றி நல்லெண்ணம் இல்லாதவனாகிய சல்லியனுக்கு இந்தத் தற்புகழ்ச்சி கொஞ்சமும் ஏற்றதாகப் படவில்லை “ஏன் இந்த வீண் பெருமை? வாய்ப் பேச்சில் இதைப் பேசி என்ன பயன்? அல்லது உன் பெருமைகளை நான் ஒருவன் தெரிந்து கொள்வதனால் என்ன ஆகப்போகிறது? நீ உண்மையிலேயே வீரனானால் வாய்ப் பேச்சை விட்டு விட்டு அர்ச்சுனனோடு

அ. கு. - 32