பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

எண்ணி மிதிக்கிறவர்கள் அந்தத் தருமத்தாலேயே சுடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். தண்ணீரில் உப்பு விழுந்தால் தண்ணீரா கரைகிறது? உப்புத்தானே சுரைகிறது. நன்மையைத் தீமை நெருக்கினால் நன்மை அழிவதில்லை. தீமைதான் அழிகிறது.

துரியோதனன், துச்சாதனன், சகுனி போன்ற தீயவர்களையும் இந்தக் கதையில் காண்கிறோம். விதுரன், வீட்டுமன், தருமன், விகர்ணன், அர்ச்சுனன் போன்ற நல்லவர்களையும் காண்கிறோம். கர்ணனையும், வீமனையும் போலப் பலசாலிகளைக் காண்கிறோம். குந்தியையும், காந்தாரியையும் போலத் தாய்மார்களையும், திருதராட்டிரன், பாண்டு போன்ற தகப்பன்மார்களையும் காண்கிறோம். திரெளபதி, சுபத்திரை, சித்திராங்கதை போன்ற பெண் திலகங்களையும் இந்த மகாகாவியத்தில் தான் சந்திக்கிறோம். எல்லாம் தெரிந்து எல்லாவற்றுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிக்கொண்டே ஒன்றுமறியாத பாமரன் போல் சிரித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவான கண்ணன் இதயத்திலிருந்து மறைவானா? அழகு மிளிரும் வாலிபப் பருவத்திலேயே போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த அபிமன்யுவுக்காக நாம் கண்ணீர் சிந்தாமல் இருப்போமா? எல்லா இன்னல்களுக்கும் அப்பால் குருஷேத்திரக் களத்தில் பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த யுத்தத்திற்குப்பின் பாண்டவர்கள் மூலமாக உண்மையும், அறமும் வெற்றி பெற்றனவே. அதற்காக தம்முடைய இதயம் விம்மிப் பூரிக்காமல் இருக்குமா?

மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக்கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகிற பக்தனைப் போலப் பத்துப் பருவங்களையும் நூற்றுக்கணக்கான சருக்கங்களையும் உடைய இந்த மகா காவியத்தில் நுழைந்து எத்தனையோ நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்மை தீமை தெரியாதவர்களையும் சந்தித்துவிட்டு மன அமைதியோடு கீழே இறங்கி வருவோம்.