பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94
அறத்தின் குரல்
 

கொடுத்து விட்டுச் சித்திரரதனோடு போர் செய்ய முற்பட்டான். இருவருக்கும் பயங்கரமான போர் நிகழ்ந்தது. சித்திரரதனுடைய அகம்பாவத்திற்கு அர்ச்சுனன் சரியான புத்தி கற்பித்தான். தோல்வியடைந்த பின்புதான் அவனுக்குப் புத்தி வந்தது. அவன் பாண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்கள் ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்தான். சித்திரரதனின் பேதமையை எண்ணித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டே கங்கையின் அக்கரையிலிருந்து தெளமிய முனிவரின் ஆசிரமத்தை யடைந்தனர் குந்தியும் பாண்டவர்களும். அப்போது பொழுது புலர்கின்ற நேரமாகியிருந்தது. ஆசிரமத்தில் இருந்த தெளமிய முனிவர் தாமும் பாஞ்சால நகரத்துக்கு உடன் வருவதாகக் கூறி அவர்களோடு புறப்பட்டார். அவர்கள் பாஞ்சால நகருக்குச் செல்லும் வனவழியிலே வீசிய மலர்களின் மணத்தோடு கூடிய இனிய தென்றற் காற்று இரவெல்லாம் நடந்து வந்த களைப்பைப் போக்குவதற்கென்றே வீசியது போலிருந்தது. வழி நடையின் போது அவர்கள் அங்கங்கே கண்ட சில காட்சிகள் சுயம்வரத்தில் அர்ச்சுனனுக்கே வெற்றி கிட்டும் என்பதற்கேற்ற நல்ல நிமித்தங்களாக அமைந்தன.

கதிரவன் நன்கு வெளிப்போந்து ஒளி பரவத் தொடங்கியிருந்த நேரத்தில் அவர்கள் பாஞ்சால நகரத்தின் ஊரெல்லைக்குள் பிரவேசித்தனர். பொற்கலசங்களின் மேல் கொடிகள் வீசிப் பறக்கும் கோபுரங்களுடனே கூடிய மதில்களையும் மாடங்களையும் கம்பீரமான கட்டிடங் களையும் பாண்டவர்கள் ஊரெல்லையிலேயே தொலைவுக் காட்சியாகக் கண்டுகளித்தனர். கோட்டைச் சுவர்களிலே வீசிப் பறந்த கொடிகள் பாண்டவர்களை ‘நீங்கள் வர வேண்டும், வரவேண்டும்’ -என்று கைகாட்டி அழைப்பது போல விளங்கின. நகரத்தின் புறமதிலை அடைந்த பாண்டவர்கள் அங்கே இருந்த ஒரு குயவனுடைய இருக்கையில் தங்கள் தாயைத் தங்கச் செய்துவிட்டுத் தெளமிய முனிவரோடு திரெளபதியின் சுயம்வரம் நடந்து