உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

எந்த பதவி தேவையானாலும்‌, மன்னனுடைய ஆதரவு கிட்டினால்மட்டும்‌ போதாது— பக்கிங்காம்‌ தலை அசைக்க வேண்டும்‌—அவன்‌ சிரமோ; காணிக்கைபெறாமல் அசையாது. நீதிமன்றத்‌ தீர்ப்புகளை மாற்றுவான்‌. வியாபாரக்‌ கோட்டங்களை ஆக்குவான்‌, அழிப்பான் மாளிகையிலிருப்போரைச் சிறைக்குள்‌ 'தள்ளுவான்‌'. சிறையிலிருப்போரைச்‌ சீமானாக்குவான். எதுவும் செய்வான், எவரும்‌ அவன்‌ பாதையில்‌ குறுக்கிடக்‌ கூடாது! தன்‌ உறவினர்களுக்கு உயர்‌ பதவி! பெரிய பிரபுக்களின் குடும்பத்தாருடன், மணவினை மூலமாக உறவு! பக்கிங்காம், முடிதரியா மன்னன் போலாகிவிட்டான். தன் விருப்பத்துக்கு மாறாக நடப்பவர் யாரானாலும், அவர்கள் மீது பகை கக்குவான்.

ஸ்பெயின்‌ அரச குடும்பத்தார்‌ அவனுடைய அட்டகாசத்தைக்‌ கேலி செய்தனர்‌—பக்கிங்காம்‌, ஸ்பெயின்மீது, போர் தொடுக்கும்படி பிரிட்டனை எழுப்பமுடிந்தது.

பிரன்ச்சு நாட்டு இராணி ஆன்‌, இவன்‌ மையலில்‌ வீழக்கண்டு, பிரன்ச்சு அரசர்‌ தடுத்தார்‌—பிரிட்டனுக்கும்‌ பிரான்சுக்கும்‌ போர்‌ மூண்டது! பிரன்ச்சு அரசகுடும்பத்‌தாருடன் தனக்கு ஏற்பட்ட பகையின்‌ காரணமாக, பக்கிங்காம்‌, சார்லஸ்‌ திருமணம்‌ செய்துகொண்டிருந்த பிரான்ச்சு அரசகுமாரி ஹெனிரிடாவுக்கும்‌ மன்னனுக்கும்‌ மனக்கசப்பு மூட்டிவிட்டான்‌—பக்கிங்காம்‌ இருந்த வரையில், அரசி அழுது கிடந்தாள்‌. அவ்வளவு பலமான பிடி இருந்தது பக்கிங்காமுக்கு.

மூன்று பேரரசுகளாகத் திகழ்ந்த பிரிட்டன்‌, பிரான்ஸ்‌, ஸ்பெயின்‌, ஆகிய இடங்களில்‌, மன்னர்களை ஆட்டிப்‌ படைத்தவர்கள்‌, முறையே பக்கிங்காம்‌, ரிஷ்லு, ஓலி ஸ்வாரி, என்பவர்கள்‌. இதிலே ரிஷ்லு ஆற்றல் மிக்க-