உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் கரமும் மன்னன் சிரமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

தீரவில்லை பணம்‌ மேலும்‌ தேவைப்பட்டது ஐரோப்பாவில், ஜேம்ஸ்‌ மன்னனுடைய மருமகன்‌, சமர்ச்சுழலில் சிக்கிக்கொண்டிருந்தான்‌; அவனுக்கு உதவி செய்யப்‌ பணம்‌ ஏராளமாகத்‌ தேவைப்பட்டது. மாமன்றமோ மறுக்கிறது. எனவே, ஜேம்ஸ், மக்கள், கட்டாயமாகக் கடன் தரவேண்டுமென்றான்‌—இனாம்‌ கொடுக்கச் சொல்லி வலியுறுத்தினான்‌—இந்த ஆகா வழிகள்‌ அனைத்‌தையும்‌ அவனுடைய அருமைத்‌ திருக்குமாரன்‌ சார்லசும்‌, கற்றுக்‌ கொண்டான்‌. தந்தை விதைத்தான்‌ மகன்‌ அறுத்‌தெடுத்தான்!

பணமுடையைத்‌ தீர்த்துகொள்ள, மாமன்றத்திடம்‌ பக்குவமாக நடந்துகொள்வது முறையாயிருக்க, மன்‌னன்‌ மக்களிடம்‌ பல்வேறு முறையில்‌ பணத்தைப்‌ பறித்து, அவர்களின்‌ கோபத்தைக்‌ கிளறியதுடன்‌, மகனுக்குத்‌ திருமணம்‌ செய்வித்து, அதன்‌ மூலம்‌ ஏராளமான பணம்‌ பெற முடிகிறதா என்று பரீட்சை பார்க்கலானான்‌, இந்தச்‌ செயலாலும்‌, மக்களுடைய கோபம்‌ வளர்ந்தது

பிரிட்டிஷ்‌ மக்கள்‌, கத்தோலிக்க மார்க்கத்தை நீக்கிவிட்டு பிராடெஸ்ட்டெண்டு மார்க்கத்தை அரச மார்க்கமாகக்‌ கொண்டிருந்தனர்‌. எனினும்‌, கத்தோலிக்கர்கள்‌, இழந்த இடத்தைப்‌ பிடிக்க எப்போது வாய்ப்பு கிடைக்‌கும்‌ என்று எதிர்பார்த்த வண்ணமிருந்தனர்‌. இதனால்‌, பிரிட்டிஷ்‌ மக்களில்‌ பெரும்பாலாருக்குக்‌ கத்தோலிக்கரிடம்‌ கடுங்கோபம்‌, சந்தேகம்‌, பயமும்கூட! எனவே மார்க்கத்‌ துறையிலே ஒரு சிறு மாறுதல்‌ கூறப்பட்டாலும்‌ கத்தோலிக்கரின்‌ கரம்‌ அதிலே இருப்பதாக எண்ணிக் கண்டிப்பர்‌.

கத்தோலிக்கருக்கும்‌ பிராடெஸ்ட்டெண்டுகளுக்கும்‌ இடையே கிலேசம்‌ இருந்ததுடன்‌, பிராடெஸ்ட்டெண்டுகளுக்குள்ளாகவே, பிரிவுகளும்‌ இருந்தன.