97
கட்டளையிட்டனர். மன்னன் ஏதேனும் சூழ்ச்சி செய்து, ஸ்டாபோர்டை தப்பி ஓடச்செய்துவிடுவானோ என்ற சந்தேகம்கொண்ட ஆறாயிரவர், கிடைத்த ஆயுதம் தாங்கிக்கொண்டு, மாமன்றத்தைச் சூழ்ந்துகொண்டனர்.
நீதி வேண்டும்! கொடியவன் தண்டிக்கப்பட வேண்டும்! என்று ஒரே முழக்கம்,
அரண்மனை அருகேயும் பெருந்திரள்—அரசனைக் கண்டிக்கிறது—அரசியின் கண்களிலே நீர்—பரிவாரம் பயத்தால் நடுங்குகிறது; ஸ்டாபோர்டு சிறையிலே பலிமேடை தெரிகிறது!
முறைப்படி இந்த விசாரணை நடைபெறவில்லை என்று சிலர் முணுமுணுத்தனர், செயின்ட்ஜான் “முயலையும் மானையும் வலைபோட்டுப் பிடிக்கவேண்டும், வாட்டி வதைக்கக்கூடாது என்று வேட்டைமுறை உண்டு; ஆனால் ஓநாயையும் நரியையும் கண்ட இடத்தில் கிடைத்ததைக் கொண்டு சாகடிப்பர்” என்று கூறினார். மக்கள் கொண்ட கருத்தைத்தான் அவர் எடுத்துரைத்தார்.
“என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் இறையே! எனக்காகச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்”, என்று ஸ்டாபோர்டு உபகாரத்துக்காக ஒரு கடிதம் அனுப்பினான்—மன்னன் கண்களைத் துடைத்துக்கொண்டான். பெருமூச்சுடன், மாமன்றம் அனுப்பிய ஓலைக்கு ஒப்பமளித்தான்.
மரண ஓலை தயாராகிவிட்டது, மன்னன் ஒப்பமும் கிடைத்துவிட்டது என்பதறிந்த ஸ்டாபோர்டு பதறினான், “மன்னனை நம்பாதீர்!” என்ற முதுமொழிகூறிக் கசிந்துருகினான்.
எப்படிப்பட்ட மன்னனை நம்பினான் இந்தப் பிரபு! எதன் பொருட்டு நம்பினான்!