பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


“இருட்டானபிறகு அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டுக்குப் போவோம்” என்று முத்து தலைகுனிந்த படியே சொன்னான். கமலத்தைப் பார்க்கவும் அவனுக்கு அவமானமாக இருந்தது.

பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால், வெளிச்சமாக இருக்கும்போது வீட்டுக்குப் போக அவர்களுக்குத் தைரியம் வரவில்லை. முத்துவுக்குப் பசியோடு சேர்ந்து உடம்பெல்லாம் வலி எடுத்தது.

இருட்டான பிறகு அவர்கள் வீட்டை அடைந்தார்கள். “எங்கே போயிருந்தீர்கள் ? காலையில் போனவர்கள் சாப்பிடக்கூட வரவில்லையே!” என்று அம்மா கேட்டாள்.

கமலம் முத்துவின் முகத்தைப் பார்த்தாள். அவன் ‘திருதிரு’ வென்று விழித்துக்கொண்டு பதில் எதுவும் சொல்லத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தான், அந்தச் சமயத்தில் தோட்டத்துக்குச் சொந்தக்காரியான கிழவி அங்கே வந்தாள். அவளைக் கண்டதும் இருவரும் அஞ்சி நடுங்கினார்கள்.

“முத்து, எங்கே போனாய்? உன்னைக் காலையிலிருந்து மாம்பழம் பறிக்கத் தேடினேன். நீங்கள் காணப்படாமையால் வேறு இரண்டு சிறுவர்களைக் கூப்பிட்டு மாம்பழம் பறிக்கச் சொன்னேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினைந்து பழம் கூலியாகக் கொடுத்தேன். நீங்கள் வீட்டில் இருந்திருந்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும்” என்றாள் அந்தப் பாட்டி.

முத்து தலைகுனிந்து நின்றான். “உங்களுக்கும் ஆளுக்கொரு பழம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று பாட்டி அன்போடு சொன்னாள்.

அந்தப் பாட்டி, வந்ததால் தாயார் அவர்களை மறுபடியும் விசாரிக்கவில்லை. ஆனால் முத்து அந்த மாம்பழத்தைத் தொடவே இல்லை.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/39&oldid=1090627" இலிருந்து மீள்விக்கப்பட்டது