பக்கம்:மணி பல்லவம் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

99

கொள்ள வேண்டியதில்லை என்ற திடமான கருத்துடன் இளங்குமரன் மேலும் வாயிலை நோக்கி நடக்கலானான். ஆனால் அவர் அவனைச் செல்லவிடவில்லை.

“தம்பீ! இவ்வளவு அவசரம் எதற்கு, சற்றே நின்று போகலாமல்லவா?” என்று கூறிக் கொண்டே அவனருகில் வந்துவிட்டார் அவர், சுரமஞ்சரி இளங்குமரனின் மற்போர் வீரத்தைப் புகழ்ந்து சொல்லி அவனைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்தாள்.

“நானே இந்தப் பிள்ளையை முன்பு எங்கோ பார்த்திருக்கிறாற்போல் நினைவிருக்கிறதம்மா!” என்று தான் நடந்து கொண்டிருந்த வழியையே மறிக்கிறாற்போல அவர் தனக்கு முன்னால் வந்து நின்றபோது இளங்குமரனால் மேலே நடக்க முடியவில்லை. நின்றான். அவனைத் தலையிலிருந்து கால் வரை நன்றாக உற்றுப் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை. அவனை எங்கோ பார்த்தாற்போல் நினைவிருப்பதாக அவர் கூறினாலும் அவரைத் தான் எங்குமே அதற்குமுன் சந்தித்ததாக இளங்குமரனுக்கு நினைவில்லை. அவருடைய பார்வையும் தோற்றமும் இளங்குமரனைத் தவிர வேறு சாதாரணமானவர்களுக்குப் பயமூட்டியிருக்கும்.

அவன் மேல் இடித்து விடுகிறாற்போல் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் “கரு நாவற்பழம் போல் உன் கழுத்து வலது பக்கத்துச் சரிவில் எத்தனை அழகான மச்சம் இருக்கிறது பார்த்தாயா? பிற்காலத்தில் நீ மகா யோகக்காரனாக விளங்கப் போகிறாய் தம்பீ! இதுபோல் வலது புறத்தில் இவ்வளவு பெரிய மச்சம் எல்லாருக்கும் அமைவது அரிது!” என்று வியந்து கூறியவாரே அவனுடைய கண்களையும் முகத்தையும் கூர்ந்து நோக்கினார்.

இளங்குமரன் அவர் கூறியதையும் பார்ப்பதையும் கவனித்தும் சலனமின்றி அமைதியாக நின்றான். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே அடுத்தாற்போல் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/100&oldid=1141768" இலிருந்து மீள்விக்கப்பட்டது