பக்கம்:மணி பல்லவம் 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

மணிபல்லவம்

மனிதனாக நினைக்கிறார்களென்று நான் பெருமைப்படலாம். நீங்கள் எல்லோரும் என் அன்புக்குரியவர்கள். பெருவீரராகிய நீலநாக மறவர் என் மதிப்புக்குரியவர், எனக்கும் உங்களுக்கும் படைக்கலப் பயிற்சியும், போர்த்துறைக் கலைகளும் கற்பித்த ஆசிரியர்பிரான் அவர். ஆனால் அதற்காக அவரும் நீங்களும் சேர்ந்து கொண்டு என்னைத் தெருவில் திரியும் சிறுபிள்ளையாக எண்ணி எனக்கு அனுதாபப்படுவதை நான் ஏற்பதற்கில்லை.”

வலது கையை மேலே தூக்கி ஆட்டிக்கொண்டே ஆவேசத்தோடு பேசினான் இளங்குமரன், அப்போது அந்த நிலையில் அவனை எதிர்த்துப் பேசி மறுமொழி சொல்வதற்கே தயங்கி அஞ்சினார்கள் நண்பர்கள்.

இதன் பின் பட்டினப்பாக்கத்து எல்லை கடந்து மருவூர்ப்பாக்கத்துக்குள் நுழைகிறவரை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.

இப்போது அவர்கள் மருவூர்ப்பாக்கத்தில் நீலநாக மறவரின் மிகப்பெரிய படைக்கலச் சாலையை நெருங்கிக் கொண்டிருந்தனர். மெல்ல மறுபடியும் இளங்குமரனிடம் பேச்சைத் தொடங்கினான் கதக்கண்ணன்.

“பசிக் கோபத்தில் ஏதேதோ பேசிவிட்டாய், இளங்குமரா! ஆசிரியர்பிரானிடமும் அப்படி ஏதாவது ஆத்திரப் பட்டுப் பேசிவிடாதே.”

“பசிக் கோபமல்ல நண்பனே! கோபப்பசி என்றே வைத்துக்கொள்” என்று பழைய வேகம் குறையாமலே பதில் வந்தது. இளங்குமரனிடமிருந்து.

“எதுவாயிருந்தாலும் இருக்கட்டும் ஆசிரியர் பிரானைச் சந்தித்த்தும் உன்னுடைய வயிற்றுப் பசி, பசிக்கோபம், கோபப்பசி எல்லாமே நீங்கி விடுகின்றனவா இல்லையா பார்” என்று நகைத்தபடி சொன்னான் கதக்கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/123&oldid=1141794" இலிருந்து மீள்விக்கப்பட்டது