பக்கம்:மணி பல்லவம் 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

மணிபல்லவம்

எல்லோருமே துரத்தி வளைத்துக் கொண்டு விரட்டியிருந்தால் அவர்பாடு வேதனையாகப் போயிருக்கும். நல்ல வேளையாக வந்த கூட்டத்தில் ஒரு பகுதி தீயணைக்கும் முயற்சிக்காகத் தவச்சாலையருகிலேயே தங்கிவிட்டது.

ஓடிஓடிக் களைத்துப்போன வளநாடுடையார் இனி மேல் ஓடினால் கீழே விழுந்துவிட நேரும் என்கிற அளவு தளர்ந்திருந்தார். துரத்துகிறவர்களும் விடாமல் துரத்திக் கொண்டு வந்தார்கள்.

அந்நிலையில் அவர் ஒரு காரியம் செய்தார். மேலே ஓட முடியாமல் சுடுகாட்டுக் கோட்டத்தை ஒட்டியிருந்த பாழடைந்த காளிகோவில் ஒன்றின் இருண்ட பகுதியில் புகுந்து மூச்சு இரைக்க நின்றார்.

“வாருங்கள்!” என்ற மெல்லிய அழைப்புக் குரலோடு பின்புறத்து இருளிலிருந்து இரண்டு கைகள் அவருடைய தோளைத் தீண்டின.

வளநாடுடையார் இருண்டு பயங்கரமாயிருந்த அந்த இடத்தில் பின்புறமிருந்து ஒலித்த குரல் தமக்குப் பழக்கமாகயிருந்ததை உணர்ந்தாலும் தற்காப்புக்காகத் தோள்மேல் விழுந்த கைகளை உதறிவிட்டு விரைந்து திரும்பி வேலை ஓங்கினார். ஓங்கிய வேலை அந்தக் கைகள் எதிரே மறுத்துப் பிடித்தன.

“வேலை ஓங்குவதற்கு அவசியமில்லை. நான்தான் அருட்செல்வர்! என்னை இவ்வளவு சுலபமாக வேலாலே குத்திக் கொன்றுவிட ஆசைப்படாதீர்கள். நான் இன்னும் சிறிது காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து தொலைக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே குரல் அடையாளம் தெரியும்படி தெளிவாகக் கூறிவிட்டு வளநாடுடையாருக்கு அருகில் வந்து நின்று கொண்டார் அருட்செல்வ முனிவர்.

வளநாடுடையாருக்கு வியப்பு அடங்கச் சில கணங்கள் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/139&oldid=1141818" இலிருந்து மீள்விக்கப்பட்டது