பக்கம்:மணி பல்லவம் 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

149

வரை வென்றுவிடும் வீரமும் அவருக்கு இருந்தது. அவர் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் இடம் ஒன்று உண்டு. அதுதான் ஆலமுற்றத்து அண்ணல் கோவில். வீரத்தையே ஒரு தவமாகப் போற்றி நோற்றுக் கொண்டிருந்தார். அவர் தம்முடைய வீரத்தவத்தையும் அதன் மரபையும் வளர்க்கும் ஆவலினால்தான் அந்தப் படைக்கலச்சாலையில் பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வந்தார். அவர் தம்மிடம் வரும் இளைஞர்களைத் தெரிந்து தெளியும் முறையே தனியானது.

படைக்கலப் பயிற்சி பெறத் தம்மை நாடிவரும் இளைஞனை முன்னால் நிறுத்திப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே எதிரே இருக்கும் இளைஞன் முற்றிலும் எதிர்பாராதபடி பக்கத்திலுள்ள ஒரு வேலை உருவிக் குத்திவிடுவதுபோல் அவன் முகத்தைக் குறிவைத்து வேகமாக ஓங்கிக் கொண்டு போவார். அப்போது அவன் கண்களை இமைத்து முகத்தில் பயக் குறிப்புத் தோன்றப் பின்னுக்கு நகருவானானால், “சுகமில்லை தம்பி! உனக்கும் வீரத்துக்கும் காததூரம், நீ ஒரு காரியம் செய்யலாம். நாளங்காடியில் போய் ஏதாவது ஒரு மூலையில் பூக்கடை வைக்கலாம். உன்னைப் போன்ற ஆட்கள் வீரத்தை நம்புவதைவிடப் பூச்சூடிக்கொள்ளும் பெண்களின் கூந்தலை நம்பினால் நன்றாகப் பிழைக்கலாம். எதிரிலிருப்பவன் உன்னை நோக்கி வேலை ஓங்கும் போது பயத்தினால் உன் கண்கள் இமைத்தாலும் உனக்குத் தோல்விதான், தூய வீரன் அப்படி இமைக்கலாகாது.

விழித்த கண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு!

என்று நம்முடைய தமிழ்ப் பெரியவர்கள் வீரருக்கு அமைதி கூறியிருக்கிறார்கள். உன்னிடம் அந்தப் பொருத்தம் அமையவில்லை; போய் வா” என்று சொல்லித் துரத்தி விடுவார். அக்காலத்தில் மிகவும் அருமையானவையாக இருந்த சில போர் நுணுக்கங்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/150&oldid=1141833" இலிருந்து மீள்விக்கப்பட்டது