பக்கம்:மணி பல்லவம் 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

183

செம்பஞ்சுக் குழம்பைத் தோய்த்துக் கொண்டு வெள்ளியில் வார்த்துத் தீட்டினாற் போன்ற தாழை மடலில் முத்து முத்தாக எழுதத் தொடங்கினாள் சுரமஞ்சரி. எழுதுவதற்காகவும் எழுதப்படுகிறவருக்காகவும் அவளுடைய நெஞ்சுக்குள் மணந்து கொண்டிருந்த நினைவுகளைப் போலவே பிச்சியும், தாழையும் செம்பஞ்சுக் குழம்பும் கலந்து உருவான கையெழுத்துக்களும் கம்மென்று மணம் கிளர்ந்தன. அப்போது சுரமஞ்சரியின் நெஞ்சமே ஒரு பூக்குடலையாகத்தான் இருந்தது. நறுமண நினைவுகள் என்னும் தேன்சுவைப் பூக்கள் அவளது நெஞ்சு நிறையப் பூத்திருந்தன. மண்டபத்துப் பூக்குடலையிலிருந்து மலரும் மடலும் எடுத்து நெஞ்சப் பூக்குடலையிலிருந்து நினைவுகளைத் தொடுத்து அவள் எழுதலானாள். பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வசந்த மாலை தனது அறிந்து கொள்ளும் ஆவலை அடக்க முடியாமல், “என்னம்மா எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“மடல் எழுதுகிறேன்.”

“மடல் எழுதுவது தெரிகிறது! ஆனால் யாருக்கு?”

“இதென்ன கேள்வி? உன்னைப்போல் எதையும் குறிப்பாக அறிந்து கொள்ளத் தெரியாத பெண் எனக்குத் தோழியாக வாய்த்திருக்கக் கூடாது வசந்தமாலை!” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. வசந்தமாலைக்குப் புரிந்தது. தலைவியின் குறிப்பு மட்டுமல்லாமல் குதூகலமும் சேர்த்துப் புரிந்தது. “நெஞ்சுளம் கொண்ட அன்பருக்கு” என்று சுரமஞ்சரி தன் மடலைத் தொடங்கியிருப்பதையும் வசந்தமாலை பார்த்தாள். மடல் தீட்டும் அந்த நிலையில் தன் தலைவியின் கையும், விரல்களும், குவிந்து குழைந்து நளினமாகத் தோன்றின தோழிக்கு, நிலவில் முளைத்த தளிர்கள்போல் அழகிய விரல்கள் அவை. நிலவிலிருந்து தளிர்த்த கொழுந்து போன்ற முன்கை விரல்களில் சுடர் விரியும் மோதிரங்கள், அந்த மடலைத் தீட்டும் போது சுரமஞ்சரி மணப்பெண் போல் அழகு கொண்டு தோன்றினாள் வசந்தமாலைக்கு. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/184&oldid=1141987" இலிருந்து மீள்விக்கப்பட்டது