பக்கம்:மணி பல்லவம் 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

மணிபல்லவம்

“தம்பீ! இந்த வேலின் நுனி இளம் பெண்ணொருத்தியின் அழகிய கண்போன்று இருக்கிறதல்லவா?” என்று தொடர்பில்லாமல் பேச்சைத் தொடங்கினார் அவர். இளங்குமரன் சிறிது நேரம் அவருக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் தயங்கி நின்றான். அவர் அவனை விடவில்லை. மீண்டும் தூண்டிக் கேட்கலானார்.

“உன்னைத்தான் கேட்கிறேன் தம்பி! வார்த்து வடித்து கூர்மையாகத் தோன்றும் இந்த வேலின் நுனி இளநங்கை ஒருத்தியின் நீள் விழியை நினைவூட்டுகிறது இல்லையா?”

“கவிகள் அப்படிச் சொல்லித் தங்களையும் உலகத்தையும் சேர்த்து ஒன்றாக ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். வேல் விழி, மீன் விழி, மான் விழி என்று உவமை சொல்லி வேலையும், மீனையும், மானையும் பார்க்க நேர்ந்தபோதும்கூட, பெண்களின் கண்களைத் தவிரத் தங்களுக்கு வேறெதுவும் நினைவு வரவில்லை என்கிற சொந்தப் பலவீனத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். பாடியும் நிரூபித்திருக்கிறார்கள்.”

இளங்குமரன் இவ்வாறு கூறியதும் சலனமற்றிருந்த நீலநாக மறவரின் முகத்தில் சிரிப்பின் சாயல் தென்படலாயிற்று. அந்தச் சிரிப்பை ஒளித்து மறைக்க அவர் முயன்றும் அதன் சாயல் முகத்தில் வெளிப்பட்டுவிட்டது. மேலும் அவர் அவனைக் கேட்கலானார்.

“உவமை கூறுவதைக் கவிகளின் பலவீனமென்று நீ சொல்கிறாய், தம்பீ! ஆனால் கவிகள் அதையே தங்களுடைய பலம் என்கிறார்கள். கவிதையின் அணிகளில் ஒன்றாகவும் உவமையைக் கணக்கிடுகிறார்களே, உவமை இல்லாவிட்டால் வருணனை அமையுமா?”

“வேறொரு விதமாகக் கணக்கிட்டால் அதிகமான பலமே பலவீனமாக முடியும். அளவுக்கு மீறின பலமே ஒரு பலவீனம்தான்! வேலின் நுனியில் வீரம் பிறக்கிறது. பெண்ணின் விழிக்கடையில் வீரமும் ஆண்மையும் அழிகின்றன. வீரத்தையும் ஆண்மையையும் அழிக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/217&oldid=1142026" இலிருந்து மீள்விக்கப்பட்டது