பக்கம்:மணி பல்லவம் 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

227

காட்சியளித்தார். நகைவேழம்பர் என்னும் கொடுமையின் வடிவமும் அவர் அருகில் இருந்தது.

“உன்னைத்தான் கூப்பிடுகிறேன், இப்படி வா மகளே!”

அமைதியான அந்த இரவு நேரத்தில் சுரமஞ்சரியின் மாடத்துச் சுவர்களில் அவளுடைய தந்தையாரின் இடி முழக்கக் குரல் இரண்டாம் முறையாக எதிரொலித்து அதிர்ந்தது. பயத்தினால் வசந்தமாலை நடுங்கினாள். அவளுடைய கையிலிருந்த தீபமும், தீபத்தின் சுடரும் சேர்ந்து நடுங்கின. சுரமஞ்சரி பதில் கூறாமல் நின்ற இடத்திலேயே நின்றாள். ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டே வலது காலைச் சாய்த்துச் சாய்த்து தடந்து அவரே அவளருகில் வந்தார். அவருடைய ஊன்றுகோலின் கைப்பிடியில் ஒரு யாளி வாயைப் பிளந்து கொண்டிருப்பது போன்ற சிங்கமுகத் தோற்றம் செதுக்கப் பெற்று அதன் கண்களுக்கு இரத்தக் குமிழிகள் போல் இரண்டு சிவப்பு இரத்தினக் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன. அவர் சுரமஞ்சரியை நோக்கிக் கோபத்தோடு பாய்ந்து, பாய்ந்து நடந்து வந்த வேகத்தில் அவருடைய முகமே, ஊன்று கோலின் சிங்கமுகத்தைவிடக் கடுமையாகத் தோன்றுவது போலிருந்தது. கைப்பிடியின் சிங்கமுகத்தில் கண்களுக் காகப் பதித்திருந்த இரத்தினக் கற்கள் தீ மொட்டுக்களைப் போல் விளக்கின் ஒளியில் மின்னின.

அசையாமல் நின்று கொண்டிருந்த சுரமஞ்சரிக்கு அருகில் வந்து சாய்ந்தாற்போல் ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நின்றபடி அவர் கேட்டார்.

“பொன்னையும், மணிகளையும், முத்துக்களையும் கப்பலேற்றி வாணிகம் செய்து செல்வம் குவித்துக் கொண்டிருப்பதாக நேற்றுவரையில் தான் பெருமைப்பட்டதுண்டு மகளே! ஆனால் இன்றுதான், உன்னைப்போல் குடிப் பெருமையையும், மானத்தையும் சேர்த்துக் கப்பலேற்றும் மகள் ஒருத்திக்கு நான் தந்தையாக இருக்கிறேன் என்ற சிறுமையை முதல் முதலாக உணர்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/228&oldid=1142043" இலிருந்து மீள்விக்கப்பட்டது