பக்கம்:மணி பல்லவம் 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

மணிபல்லவம்

“பட்டினப்பாக்கத்துப் பக்கமாக வந்தால் மாளிகைக்கு அவசியம் வந்து போ, தம்பீ!” என்று அவர் கூறிய உபசாரச் சொற்களையும் அவன் இலட்சியம் செய்யவில்லை. ஆனாலும் பெரிய சூழ்ச்சி ஒன்றின் அருகில் போய்விட்டு மீண்டும் வந்தது போல் அவன் மனத்தில் ஒரு குழப்பம் இருந்தது.

இளங்குமரன் படைக்கலச் சாலைக்குள் புகுந்து திரட்டி வாசற்கதவை அடைத்துக் கொள்கிற ஒலியையும் கேட்ட பின்னர் ஆலமுற்றத்தில் நின்று கொண்டிருந்த நகைவேழம்பர் தம் எதிரே நிற்கும் எட்டிப்பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரிடம் இப்படிக் கேட்டார்.

“வாழ்நாளிலேயே ஒரே ஒரு தடவை உண்மையைச் சொல்ல முன் வந்திருக்கிறீர்களே என்று பார்த்து வியந்து கொண்டிருந்தேன். கடைசி விநாடியில் அதையும் பொய்யாக மாற்றி எப்படியோ பயனுள்ளதாக முடித்து விட்டீர்களே?”

“நான் வணிகம் செய்பவன், ஊதியம் கிடைப்பதாயிருந்தால் எதையும் எப்படியும் மாற்றிச் சொல்ல வேண்டியதுதானே? வானவல்லியைச் சுரமஞ்சரி என்று தவறாகப் புரிந்து கொண்டு சாதித்தான் அந்தப் பின்ளை, நானும் மறுத்து தான் பார்த்தேன். நான் மறுக்க மறுக்க அவன் தன் பிடிவாதத்தை உறுதியாக்கினான். கடைசியில் ‘அவன் சொல்லியதே மெய்’ என்று ஒப்புக் கொண்டு விட்டது போல நடித்து நானும் பாராட்டினேன், என்ன காரணம் தெரியுமா நகைவேழம்பரே? அவன் கண்களில் வானவல்லி சுரமஞ்சரியாகத் தென்படுவதைச் சாதித்துக் கொள்ளலாம். அந்த அளவில் அது நமக்கு ஊதியம் தானே” என்றார் அவர்.

“உங்கள் திட்டமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தப் பிள்ளையாண்டானை இவ்வளவு எளிதில் ஏமாளியாக்கிவிட முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்றார் நகைவேழம்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/247&oldid=1142062" இலிருந்து மீள்விக்கப்பட்டது