பக்கம்:மணி பல்லவம் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

மணிபல்லவம்

பொன் உருக்குக் குழம்பைக் கரிபடிந்த தன் உலைக்களத்துத் தரையில் வெட்பநடுக்குடன் தாறுமாறாக ஊற்றும் கொல்லனைப் போல் வெள்ளியுருக்கி வீசிய மின்னல்கள் கரிய வானில் நீண்டு ஓடிச் சரிந்து, மறைந்து கொண்டிருந்தன. கோடையிடிகள் வேறு கொட்டி முழங்கின. வானமும் திருவிழாக் கொண்டாடியது.

போது விழித்தும் புலரி விழியாத வானின்கீழ் இரவு விடிந்தும் இருள் விடியாத அந்த நேரத்தில் இளங்குமரனும், கதக்கண்ணனும் குதிரைகளில் சென்று கொண்டிருந்தார்கள். குளிர்ந்த சூழலும் மழைச்சூல் கொண்ட வானமும், அந்த நேரத்தின் அழகும், மக்களெல்லாம் காவிரி முன்துறைக்குப் போயிருந்ததனால் நகரமே அதிக ஓலிகளற்றிருந்த சூழலும், காவிரிப் பூம்பட்டினத்தைக் கண் நிறைந்த கனவு நகரமாகக் காட்டின. அந்த அழகை இளங்குமரன் ஆழ்ந்த சிந்தனையுடன் அனுபவித்துப் பார்த்து மகிழ்ந்தான்.

“மனிதக்கும்பலும் அவர்களின் ஓசைகளும், பூசல்களும் பிரிந்து தனியாகத் தெரியும்போது இந்த நகரம் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா கதக்கண்ணா?” என்று மனம் நெகிழ்ந்த குரலில் கூறினான் இளங்குமரன். இயக்கமும் ஓசை ஒலிகளுமற்றிருந்த கோலத்தில் நகரமே வானத்திலிருந்து நீள நெடுந்திரை காட்டிச் சுற்றிலும் தொங்கவிட்ட ஓர் பெரிய ஓவியம் போல் தோன்றியது அவனுக்கு.

அவர்களுடைய குதிரைகள் நகரின் ஒரு பகுதியில் இருந்த உலக அறவி என்னும் பொது மன்றத்தைக் கடந்த போது அந்த மன்றத்தின் இருபுறமும் அகன்ற திண்ணைகளில் முடங்கிக் கிடந்த பலநூறு பிச்சைக்காரர்களைக் கண்டு வருந்தினான். இளங்குமரன், காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்வதற்கு வேறு வழியின்றி யாசிப்பதையே தொழிலாகக் கொண்டு வயிறு துடைக்கும் பாமரர்களின் உறைவிடம்தான் இந்த உலக அறவி. சோறூட்டும் விழாவுக்குத் தவிக்கும் இவர்களுக்கு நீராட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/249&oldid=1142064" இலிருந்து மீள்விக்கப்பட்டது