பக்கம்:மணி பல்லவம் 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

257

நன்றாக விரிந்து மலர்ந்த பின்புதான் அவர் திரும்பிப் பார்த்தார். அதுவரையில் அவருக்குப் பின்புறம் அடக்க ஒடுக்கமாகக் காத்து நின்ற நீலநாக மறவர், “அடியேன், நீலநாகன் வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

“வா அப்பா! வந்து வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தாயோ? நான் இந்தப் பூவில் தெய்வத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே தியானத்திலும் ஆழ்ந்து விட்டேன். பூ, காய், பழம், மரம், செடி, கொடி, மலை, கடல் எல்லாமே தெய்வம்தான்! அவைகளைத் தெய்வமாகப் பார்ப்பதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டால் நிற்குமிடமெல்லாம் கோவில்தான். நினைக்குமிட மெல்லாம் தியானம்தான். பார்க்குமிடம் எல்லாம் பரம்பொருள்தான். இவையெல்லாம் உனக்கு வேடிக்கையாயிருக்கும் நீலநாகா! இத்தனை முதிர்ந்த வயதில் இப்படி நேரமில்லாத நேரத்தில் மரத்தடியிலும் குளக்கரையிலும் கிடக்கிறேனே என்று நீ என்னை எண்ணி வருத்தப்பட்டாலும் படுவாய்! ஆனால் எனக்கென்னவோ வயதாக ஆக இந்தப் பித்து அதிகமாகிக் கொண்டு வருகிறது. எங்கு பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் தெய்வமாகத் தெரிகிறது. எந்தச் சிறு அழகைப் பார்த்தாலும் தெய்வத்தின் அழகாகத் தெரிகிறது. தளிர்களில் தெய்வம் அசைகிறது. மலர்களில் தெய்வம் சிரிக்கிறது, மணங்களில் தெய்வம் மணக்கிறது.”

இவ்வாறு வேகமாகச் சொல்லிக் கொண்டு வந்த அடிகள் முதுமையின் ஏலாமையால் பேச்சுத் தடையுற்று இருமினார்.

“இந்தக் காற்றில் இப்படி உட்கார்ந்திருந்தது உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை, ஐயா! வாருங்கள் உள்ளே போகலாம்” என்று அவருடைய உடலைத் தாங்கினாற் போல் தழுவி உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார் நீலநாக மறவர்.

ம-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/258&oldid=1142073" இலிருந்து மீள்விக்கப்பட்டது