பக்கம்:மணி பல்லவம் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மணிபல்லவம்

நிறைவேற்றப் போகிற சமயம் பார்த்து இப்படி வம்பு வந்து சேர்ந்ததே’ என்று நினைத்துத் தளர்ந்து கொண்டிருந்தான் மணிமார்பன். தனக்கு எட்டிக்குமரன் வீட்டு நங்கையிடமிருந்து கிடைக்கவிருக்கும் பெரிய பரிசை அவ்வளவு எளிதாக இழந்துவிட விரும்பவில்லை அந்த ஏழை ஓவியன். ‘இந்த மாபெரும் கோநகரத்தில் எனக்கு எதிரிகளும், வேண்டாதவர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள்’ என்று தன்னால் ஓவியமாக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் அதற்குச் சிறிது நேரத்துக்கு முன் தன்னிடம் கூறியிருந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பார்த்தான் மணிமார்பன். அவரைப் காப்பாற்றவும், தனக்குப் பரிசு கிடைக்கும் சந்தர்ப்பம் நழுவிப் போகாமல் காப்பாற்றிக் கொள்ளவும் ஏற்ற வழியொன்று அந்தக் குழப்பமான சூழ்நிலையில் மணிமார்பனுக்குத் தோன்றியது. பயந்து நிற்கும் இந்தப் பெண்ணோடுதான் அவர் நாளங்காடிக்கு வந்தார். வழிபாடு முடிந்ததும் இந்தப் பெண் அவருக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டு வந்து கொடுத்த போதுதான் இந்த வம்பே ஆரம்பமாயிற்று. ஆயினும் இப்போது இந்தச் சூழ்நிலையிலே என்னைப் போலவே இவளும் அவருக்கு ஓர் உதவியும் செய்ய இயலாமல் பயந்தாற்போல் நிற்கிறாள். ஆனால் அவருடைய ஓவியத்தை வரைந்து கொண்டு வந்து தந்தால் நூறு கழஞ்சு பொன் தருகிறேன் என்று சொன்னாளே. அந்தப் பேரழகியால் இப்போது அவரைக் காப்பாற்ற முடியும். பல்லக்குச் சுமக்கிறவர்களும் படையற் பொருள்களைச் சுமக்கிறவர்களுமாக அவளோடு நிறைய ஏவலாட்கள் வந்திருக்கிறார்கள். அவளிடம் சொல்லி அந்த ஏவலாட்களில் பத்துப் பன்னிரண்டு பேரை அழைத்து வந்தால் இங்கே நம் மனிதரை எதிர்க்கும் முரட்டு யவனர்களை ஓட, ஓட விரட்டலாமே!’ என்று மனத்தில் ஓர் உபாயம் தோன்றியது அந்த ஓவியனுக்கு.

உடனே அந்த உபாயத்தைச் செயலாக்கும் நோக்குடன் கூட்டத்தை மெல்ல விலக்கிக் கொண்டு எட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/69&oldid=1141690" இலிருந்து மீள்விக்கப்பட்டது