400
மணிபல்லவம்
மாளிகையின் தலைவரே எதிரில் வருவதைக் கண்டு பரிசாரகர் வணக்கமாகத் தயங்கி நின்றார். அந்த நேரத்தில் அவரை அங்கே கண்டதனால் பரிசாரகரின் மெய்யில் ஏற்பட்ட நடுக்கம் கைகளிலும் கைகளில் ஏந்தியிருந்த பொற்கலத்திலும், பொற்கலத்தில் நிறைந்திருந்த பாலிலும் கூடத் தோன்றியது.
“நகைவேழம்பர் உண்பதற்கு வந்திருந்தார் அல்லவா?” என்று பெருநிதிச் செல்வரிடமிருந்து கேள்வி பிறந்தபோது “ஆம்! இப்போதுதான் உணவை முடித்துக் கொண்டு சென்றார். அவருக்கு உணவு பரிமாறி முடித்ததும்தான் உங்களுக்குப் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்” என்று பரிசாரகர் கூறிய மறுமொழியிலும் பதற்றமிருந்தது.
வயது மூத்த அந்தப் பரிசாரகரின் முகத்தையே உற்று நோக்கியபடி சில விநாடிகள் அமைதியாக நின்றார் பெருநிதிச் செல்வர். பரிசாரகர் ஒன்றும் புரியாமல் திகைத்து மேலும் நடுங்கினார்.
“பாலைக் கீழே வைத்துவிட்டு வா”
“பரிசாரகர் பாலைக் கீழே வைத்துவிட்டு பெருநிதிச் செல்வரைப் பின்தொடர்ந்து நடந்தார். இருவரும் அந்தரங்க மண்டபத்தை அடைந்து கதவைத் தாழிட்டுக் கொண்ட பின்னும் பயந்த குரலில் இரகசியம் பேசுவது போல் பரிசாரகரிடம் ஏதோ காதருகில் பேசினார் பெருநிதிச் செல்வர். அவர் கூறியதைக் கேட்டு பரிசாரகரின் முகம் வெளிறியது. பேயறை பட்டதுபோல் பதில் சொல்லத் தோன்றாமல் மருண்டு நின்றார் பரிசாரகர்.
“இதைச் செய்ய இத்தனை தயக்கமா உனக்கு?” என்றார் பெருநிதிச் செல்வர்.
“மிகவும் கசப்பான காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்களே!”
“கசப்பும் அறுசுவைகளில் ஒன்றுதான்...”
“இருக்கலாம்... ஆனால்... இப்போது நீங்கள் செய்யச் சொல்வது எல்லை மீறிய கசப்பாயிருக்கிறதே?”