434
மணிபல்லவம்
கொழுந்துவிட்டு தழல் கதிர்போல் ஈரப் புடவையின் கீழே பொன்னொளி விரிக்கும் அந்தப் பாத கமலங்கள் மணலில் பதிந்து பதிந்து மீளும் அழகை அதிசயம்போலப் பார்த்துக்கொண்டே உடன் சென்றாள் வசந்தமாலை.
“என்னடி பார்க்கிறாய் வசந்தமாலை?”
“உங்களுடைய பட்டுப் பாதங்கள் இன்னும் எவ்வளவு நாள் இந்தக் காமன் கோவிலை இப்படி வலம் வந்து வெற்றிபெறப் போகின்றனவோ என்று நினைத்துப் பார்த்தேன் அம்மா!”
“என்னுடைய வேதனை மிக விரைவில் தீர்ந்துவிடும் என்று நீதான் முதலிலேயே வாழ்த்துக் கூறிவிட்டாயே, இனிமேல் எனக்கென்ன கவலை?” என்று தோழிக்குப் பதில் கூறிவிட்டு மேலும் வேகமாக நடந்தாள் சுரமஞ்சரி.
வழிபாடு முடிந்ததும் வந்ததைப் போலவே யாரும் அறிந்து ஐயம் கொள்ள இடமின்றி மாளிகைக்குப் போய் விட வேண்டுமென்று இருவரும் புறப்பட்டார்கள். வசந்தமாலை தன் தலைவியைத் துரிதப்படுத்தினாள்.
“நாம் திட்டமிட்டிருந்ததைவிட அதிக நேரமாகி விட்டதம்மா. ஆள் புழக்கம் ஏற்படுவதற்குமுன் இங்கிருந்து திரும்பிவிட வேண்டுமென்று வந்தோம். சிறிது நாழிகைக்கு முன்புகூட இந்த நாணற் புதரருகே யாரோ நடந்து போனார்கள். விடிகிற நேரத்தில் புதர்களிலிருந்து நரிகளைக் கலைத்துவிட்டு வேட்டையாடுவதற்காகப் பரதவ இளைஞர்கள் இங்கே கூட்டம் கூட்டமாக வருவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கூட்டமெல்லாம் வருவதற்குள் நாம் இங்கிருந்து போய்விட வேண்டும்.”
“போகலாம். அதற்காக இறக்கை கட்டிக்கொண்டு பறக்க முடியுமா என்ன? விடிந்ததும் நரி முகத்தில் விழிக்கிற உரிமை பரதவ இளைஞர்களுக்கு மட்டும் சாசனம் இல்லையே? வாய்த்தால் நாமும் நரி முகத்தில் விழிக்கலாமே தோழி!” என்று விளையாட்டுப் பேச்சில் இறங்கினாள் சுரமஞ்சரி. பேச்சு விளையாட்டா