பக்கம்:மணி பல்லவம் 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

487


வேடிக்கையாகச் சொல்லி அந்தச் சமயத்தைப் பற்றி எள்ளி நகையாடுவதும் உண்டு.

இப்போது அதே மண்டையோட்டு மதத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி எதிரே வந்து நிற்கிறாள்.

"உங்களுக்கு என்ன வேண்டும் அம்மணி! இந்த நாளங்காடிச் சதுக்கத்திலும், இதன் அழகிய சுற்றுப் புறங்களிலும் நீங்கள் விரும்புகிற விதமான பொருள் களில் எதுவும் கிடைக்க வழியில்லையே? எலும்புகளும், சுடலைச் சாம்பரும் இல்லாத இடத்துக்குக்கூட நீங்கள் வருவதுண்டோ?” என்று அவளை நோக்கிக் கேட்டான் இளங்குமரன்.

அவன் தங்கள் சமயத்துக் கொள்கைகளை இகழ்ந் தாற் போன்ற தொனியில் பேசியதால் சிறிதே சினம் கொண்டவளாகி அவனை உறுத்துப் பார்த்தாள் அவள். "நாங்கள் எங்கும் வருவோம். பயப்படுவதற்கு நாங்கள் கோழைகள் அல்ல. கொடிய வீரத்தையே சிவ மாகக் காண்கிற எங்களால் எந்த இடத்திலும் நாங்கள் விரும்பியவாறு சென்று செயற்பட முடியும்.”

'அம்மணி! நீங்கள் எப்போதும் பயப்படுவதில்லை; ஆனால் உங்களைப் பார்க்கிறவர்கள் பயப்படாத நேரமும் இல்லை. எந்த இடத்திலும் நாங்கள் விரும்பிய சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ள முடியுமென்று கூறினரீர்களே- அது மட்டும் மறுக்க முடியாத உண்மை என்று நானும் ஒப்புக் கொள்கிறேன். அம்மணி! இவ்வளவு நேரம் வரை இந்திரவிழாக் கோலம் பூண்டு மங்கல வினை நிகழும் வீடுபோலத் தோன்றிக் கொண்டிருந்த இந்த இடத்தில் நீங்கள் ஒருவர் வந்து நின்றவுடனேயே மயானத்தின் சூழ்நிலை உண்டாகி விட்டது பாருங்களேன்! இதிலிருந்தே நீங்கள் சொல்லி யது மெய்யென்று தெரிந்து கொள்ள முடிகிறதே" என்று நகை விளைக்கும் சொற்களாலேயே அவளை வாதில் நலியச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவளோ, அவனிடம் வேறு வேண்டுகோள் விடுத்தாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/37&oldid=1144057" இலிருந்து மீள்விக்கப்பட்டது