பக்கம்:மணி பல்லவம் 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

671


இதைக் கேட்டு வசந்தமாலை சிரித்தாள். சிரித்துக் கொண்டே இடுப்பிலிருந்து அதுவரை அங்கே ஒளித்து வைக்கபபட்டிருந்த அந்த ஐம்படைத் தாலியை எடுத்தாள்.

“நம்பிக்கை குறையும்போதே உங்களுக்குக் கோபம் பெருகுகிறதே அம்மா? நாம் தெரிந்துகொள்ளத் தவிக்கும் உண்மைகள் நமக்கு விரைவில் தெரிய வேண்டுமானால் இந்த ஐம்படை ஆரத்தை உள்ளே வைக்காமலே ஊன்று கோலைத் தந்தையாருக்குத் திருப்பிக் கொடுத்தனுப்ப வேண்டும். ஒரு பொருள் இன்றியமையாததா அல்லவா என்பதையும் அந்தப் பொருளைத் தன்னிடம் வைத்திருப்பவருக்கு அது எவ்வளவு அவசியமென்பதையும் அறிய வேண்டுமானால் அவை அவரிடமிருந்து பிரித்து அவர் வசம் இல்லாமற் செய்து பார்த்தால்தானே அறிய முடியும்? உங்கள் தந்தையார் இந்த ஐம்படைத்தாலியை இவ்வளவு பத்திரமாக வைத்திருப்பதன் இரகசியத்தை நீங்களும் நானும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இதை அவரிடம் இல்லாமற் செய்வது தான் அம்மா! உங்களிடம் சொன்னால் கோபித்துக் கொள்வீர்களோ என்று பயந்துதான் நானாகவே இந்த வேலையைச் செய்தேன்.”

“எந்த வேலையைப் பிறர் செய்வதால் குழப்பங்கள் வளருகின்றன என்று நான் வருந்தினேனோ அதே வேலையை நீயும் செய்கிறாயடி வசந்தமாலை!”

“அப்படியல்ல அம்மா! ‘இது என்ன இரகசியம்’ என்று ஒன்றும் புரியாமல் மனத்தில் எண்ணி எண்ணிக் குழப்பம் அடைவதைக் காட்டிலும் நம்முடைய குழப்பங்களைத் தந்திரத்தினாலேயே தீர்த்துக்கொள்ள முயல்வது நல்லதுதானே?”

சுரமஞ்சரி பதில் பேசாமல் மெளனமாகத் தோழியின் கையிலிருந்த அந்தப் பொன் ஆரத்தைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தாள்.

“நாளைக்கு விடிந்ததும் இன்று ஊன்றுகோலை மட்டும் தந்தையாரிடம் சேர்த்துவிடும்படி கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/62&oldid=1231489" இலிருந்து மீள்விக்கப்பட்டது