பக்கம்:மணி பல்லவம் 5.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

795

லிருந்து ஓர் இளைஞன் கீழே குனிந்து அவர்களையே கவனித்துக்கொண்டு நின்றான். அவனுடைய வலது கையில் சரம்சரமாக இன்னும் பல முத்துமாலைகள் இருந்தன. அவன் அந்த மாளிகையின் மதலை மாடமாகிய கொடுங்கையின் முன்புறம் விழா நாளுக்காகச் செய்யும் அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தான் போலிருக்கிறது. மாடத்தின் முன்புறம் நல்ல நாட்களில் மங்கள அடை யாளமாகக் கட்டப்படும் நாட்கொடிகளும் முத்துத் தாமங்களும் தொங்கின. அந்த மாடத்தையும் அதைப் போலவே அலங்கரிக்கப்பட்ட வேறு பல மாடங்கள் அடங்கிய அதன் முழுத் தோற்றத்தையும் பார்த்தால் அது ஏதோ பெரிய இரத்தின வணிகருடைய இல்லம் போல விளங்கியது. முத்துமாலை கைநழுவி வீதியில் சென்று கொண்டிருந்த அவர்கள் தோளில் விழுந்து விட்டதற்காக அந்த இளைஞனும் தன்னைத்தானே கடிந்து கொள்கிறவனைப் போல முகத்தில் நாணம் தெரிய நின்றான். பின்பு விரைவாகக் கீழே இறங்கி வந்தான். நாகநாட்டு இளைஞர்களுக்கே உரிய ஒளிமிக்க தோற்றமுடையவனாயிருந்தான் அவன். யாரோ புத்த பூர்ணிமை நாளுக்காகத் தனது மாளிகை மாடங்களை முத்துத் தோரணங்களால் அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது கையிலிருந்த முத்துத் தாமங்களில் ஒன்றைக் கீழே நழுவவிட்டுவிட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணி அந்த முத்துச்சரத்தை அதற்குரியவனிடம் சேர்ப்பதற்காகத் தயங்கி நின்றான் இளங்குமரன். ஆனால் இப்போது அவன் நினையாத வேறொரு காரியத்தைச் செய்தார் வளநாடுடையார். மேலே மதலைமாடத்திலிருந்து முத்துமாலையை வாங்கிக் கொண்டு போவதற்காகக் கீழிறங்கி வந்த இளைஞன் அருகில் வந்ததும்- “குலபதி! நாங்கள் உள்ளே வரலாம் அல்லவா?’ என்று சுபாவமாக அவனிடம் வினவினார் வளநாடுடையார்.

குலபதி என்று அழைக்கப்பட்ட அந்த அழகிய நாக இளைஞனுடைய முகத்தில் வளநாடுடையாரின் கேள்வியைச் செவியுற்ற பின் புன்முறுவல் மலர்ந்தது. அந்தப் புன்முறுவல்