பக்கம்:மணி பல்லவம் 5.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

912

மணிபல்லவம்

போல அமைதியான அந்த இரவு நேரத்தில் பூம்புகாரின் வீதிகளில் சுற்றினார்கள் அவர்கள்.

நீண்ட நேரத்துக்குப் பின் நடந்து நடந்து களைத்த நிலையில் பெளத்த மடத்துக்கு முன்னாலிருந்த ஒரு மகிழ மரத்தடியில் சுரமஞ்சரியோடு அமர்ந்தான் இளங்குமரன். அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சுரமஞ்சரி அங்கே பசிக்களைப்பைக் கண்டாள்.

“உங்களுடைய முகத்தில் பசிச் சோர்வு தெரிகிறது! நீங்கள் பல வேளைகளாக உண்ணவில்லை போலிருக்கிறது?”

“பல வேளைகளாக அல்ல; பல நாட்களாகவே உண்ணவில்லை. இப்போதுதான் என் பசி எனக்குத் தெரிகிறது. நீயும் என்னைப்போலவே பசிச் சோர்வோடு தான் தெரிகிறாய்!”

“நம்முடைய இல்லறம் இருவர் வயிற்றிலும் இப்படிப் பசியோடு தொடங்குகிறது. ஆனால் என்னைவிட அதிகம் பசித்துப் போயிருக்கிறீர்கள் நீங்கள்” என்று சொல்லிச் சிரித்தாள் சுரமஞ்சரி. அடுத்த கணம் அவளுடைய சிரிப்பை அவன் சொற்கள் அடக்கின. அவளை அந்தச் சொற்களால் பரிசோதனை செய்தான் அவன்.

“எந்தவிதமான செல்வங்களும் இல்லாத ஓர் ஏழையைக் காதலிப்பதால் எவ்வளவு வேதனைகள் பார்த்தாயா? என் பசிக்கும் சோறில்லை. உன் பசிக்கும் சோறில்லை. இருவர் பசிக்கும் இருவர் துயரத்துக்கும் இந்த மரத்தடி மண்தான் புகலிடம் போலிருக்கிறது!”

“ஏன் இல்லை? கணவனுடைய வயிறு நிரம்புவதை விடப் பெரிய திருப்தி மனைவிக்குக் கிடையாது. இன்று நீங்கள் எனக்குக் கிடைத்த புண்ணிய தினம். இதை நான் கொண்டாட வேண்டும். உங்களுக்கு என் கையால் நான் சோறு படைக்க வேண்டும்! பிச்சை எடுத்து வந்தாவது அதைச் செய்வேன்” என்று கூறிக்கொண்டே அவள் ஆவேசத்தோடு அங்கிருந்து எழுந்து சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/130&oldid=1231860" இலிருந்து மீள்விக்கப்பட்டது