பக்கம்:மணி பல்லவம் 5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

923

களில் வாழும். காலமெல்லாம் வாழும் அந்த நிறை வாழ்வுக்குத்தான் நான் ஆசைப்படுகிறேன்.”

“என்னைப் போன்ற பேதைப் பெண்ணுக்கு என்றும் எதனாலும் தணியாத குறைவாழ்வை அளித்துவிட்டு நீங்கள் மட்டும் நிறைவாழ்வு வாழ ஆசைப்படுகிறீர்களே?” என்று அவனை நோக்கிக் கூறிக்கொண்டே வந்தபோது முல்லையின் குரலில் அழுகை ஊடுருவிப் பேச்சைத் தடைப்படுத்திற்று. கண்களில் இடையறாத நீர்ப்பெருக்கு உடைந்து பெருக, அவள் தனக்குமுன் தவித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து இளங்குமரன் திகைத்தான்.

அழுகையால் உடைந்து தளரும் குரலில் அவளே மேலும் அவனை நோக்கிக் கூறினாள்:

“நீங்கள் என்னுடைய வாழ்வில் இறுதிவரை எனக்குத் துணையாக வர முடியாமல் இந்தப் பெரு மாளிகைப் பெண் உங்களை நடுவழியிலேயே என்னிடமிருந்து பிரித்துக் கொள்வாள் என்பது அன்றே எனக்குத் தெரியும். முதன் முதலாக இந்திர விழாவின் போது பூத சதுக்கத்தில் படையலிடுவதற்காக என்னுடன் எனக்குத் துணையாக வந்து முழு வழிக்கு துணை வராமல் பாதி வழியிலேயே என்னை மறந்துவிட்டு இவளோடு இவள் பல்லக்கில் ஏறிப் போனவர்தானே நீங்கள்?”

“உன்னுடைய துக்கத்தில் சிறு குழந்தைபோல் நீ எதை எதையோ இணைத்துப் பேசி என்மேல் குற்றம் சுமத்துகிறாய். உன் வேதனைகளை நான் உணர்கிறேன். ஆனால் உன்னை எப்படி ஆறுதல் கொள்ளச் செய்வதென்றுதான் எனக்குத் தெரியவில்லை.

“எனக்கு யாருடைய ஆறுதலும் வேண்டாம். நான் அழுது அழுது சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று கூறிவிட்டுக் கிளர்ச்சியற்ற தளர் நடையாய் நடந்து அவள் தன் வீட்டுக்குள் போவதற்குத் திரும்பியபோது-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/141&oldid=1231871" இலிருந்து மீள்விக்கப்பட்டது