பக்கம்:மணி பல்லவம் 5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

806

மணிபல்லவம்

தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டான். உத்தமமான கவிகள் வருணிக்கும் அழகுகள் எல்லாம் பொருந்திய இளநங்கை ஒருத்தி நாணத்தோடு கால் விரலால் தரையைக் கீறிக்கொண்டு நிற்பதாகவும் அவள் எதிரே வீரலட்சணங்கள் யாவும் அமைந்த வீரன் ஒருவன் தோன்றி அவளைக் காண்பதற்காகவும் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.

அங்கிருந்த மற்ற எல்லாவற்றிலிருந்தும் தனியாகப் பிரிந்து அந்த ஒற்றை ஓவியத்தில் மட்டுமே தன் கவனம் செல்லும்படி அதில் என்னதான் இருந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அதில் ஏதோ இருந்தது. மண்ணுக்குள் முறிந்து போய்க் கிடந்த கோரைக் கிழங்கு சரத் காலத்து மழை ஈரத்தின் மென்மையில் நனைந்து நனைந்து மெல்ல மண்ணுக்கு வெளியே தன் பசுந்தலையை நீட்டி இந்த உலகத்தைப் பார்த்துக் குருத்து விடும் முதல் பச்சையைப் போல் அவன் மனத்தில் முறிந்து நின்ற ஆர்வமொன்று அந்த ஓவியத்தைக் கண்டதும் பெருகிற்று. ஆனால் அந்த ஆர்வத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை போலவும் பிரமிப்பாக இருந்தது. அவதி ஞானம் என்று அவன் கேள்விப்பட்டு உணர்ந்திருந்த உணர்வின் வரையறையில்லாத தொடர்பாய் இப்போதும் இதில் ஏதோ ஒன்று புரிந்தது. புரியாமலும் மயங்கிற்று. இப்படி நெடுநேரம் தன் பார்வையை மீட்க முடியாமல் அந்த ஓவியத்தையே பார்த்துக்கொண்டிருந்த இளங்குமரன் இறுதியாகப் பார்வை மீண்டும் அது இருந்த இடத்தின் கீழே பார்த்தபோது அங்கே அணிகலன்களோ வேறு வகைப் புனைபொருள்களோ சிறிதும் காணப்படவில்லை. அதனருகேயிருந்த மாடப் பிறையில் இரண்டு மூன்று ஏட்டுச் சுவடிகள் மட்டும் முடிந்து வைக்கப்பட்டிருந்தன. இளங்குமரன் அந்த ஏட்டு முடிப்பை எடுத்து அவிழ்த்து ஏதோ ஓர் ஆவல் தூண்ட நடுவாக அப்போது தன் பார்வைக்கு தெரிந்த இடத்திலிருந்து அதை படிக்கலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/24&oldid=1206665" இலிருந்து மீள்விக்கப்பட்டது