பக்கம்:மணி பல்லவம் 5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

809

யாக வீற்றிருந்தவரைப் பார்த்தபோது இளங்குமரனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. திடீரென்று உலகமே விந்தை மயமாக மாறி மிக வேகமாகச் சுழல்வது போலிருந்தது அவனுக்கு.

“நான் இப்போது என் கண்களுக்கு முன்னால் யாரைக் காண்கிறேன் வளநாடுடையாரே?” என்று அவன் மருண்டுபோய் வினவினான். இந்தக் கேள்விக்கு வள நாடுடையார் மறுமொழி ஒன்றும் கூறாமல் புன்முறுவல் பூத்தார்.

ஆனால் இவ்வளவு வியப்புக்கும் காரணமாக உள்ளே அமர்ந்திருந்தவரே இதற்கு மறுமொழியும் கூறிவிட்டார்.

“இனிமேல் என்றுமே யாரைச் சந்திக்க முடியாதென்று சென்ற விநாடி வரை நினைத்து நம்பிக்கை இழந்து விட்டாயோ அவரைத்தான் நீ இப்போது சந்திக்கிறாய் குழந்தாய்!” என்று அருட்செல்வ முனிவரின் குரல் எதிரேயிருந்து ஒலித்தபோது, தாய்ப்பசுவின் குரலைக் கேட்டுப் பாயும் இளங்கன்று போல் அந்த அறைக்குள் தாவிப் பாய்ந்தான் இளங்குமரன். அந்த ஒரே கணத்தில் அவன் சிறு குழந்தையாகி விட்டான். “கவலைப்படாதே! இதுவரை நான் காரியத்திற்காக மட்டும்தான் செத்துப் போயிருந்தேன். உண்மையில் நான் செத்ததாக நீ கேட்டு நம்பிய பொய் நானே படைத்துப் பரப்பியதாகும்..” என்று சொல்லி அருள்நகை பூத்த வண்ணம் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த அவனை எதிர்கொண்டு மார்புறத் தழுவிக் கொண்டார் அருட்செல்வ முனிவர்.

“இது என்னுடைய வாழ்க்கையில் மிக மிகப் பெரிய பார்க்கியம் நிறைந்த நாள். மீண்டும் தங்களை இப்படி இந்தத் தோற்றத்தோடு இதே பிறவியில் சந்திக்கும் நாள் ஒன்று என் வாழ்வில் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த நல்ல நாளுக்கு நான் நிறைந்த நன்றி செலுத்த வேண்டும்...” என்று கூறிவிட்டு மேலே பேசுவதற்குச் சொற்கள் பிறவாத பரவசத்தோடு அருட் செல்வ முனிவரை நோக்கிப் பயபக்தியால் நெகிழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/27&oldid=1231768" இலிருந்து மீள்விக்கப்பட்டது