பக்கம்:மணி பல்லவம் 5.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

826

மணிபல்லவம்

தோன்றித் தீர்ந்த உடனே தீர்ந்து போகிற கோபம். செற்றம் என்பது மனத்தினுள்ளேயே நெடுங் காலமாக நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற கோபம். நீ உன் எதிரிகள் மேல் அடைய வேண்டிய கோபம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அந்தக் கோபத்தை இன்னும் ஒருநாள் தாமதமாகத்தான் அடைய வேண்டும் என்று நீ விரும்பினால் அதற்கு நான் குறுக்கே நிற்கவில்லை. உன் விருப்பப்படியே வளநாடுடையாரையும் உடன் அழைத்துக் கொண்டு நீ புத்த பூர்ணிமைக்குப் போய்விட்டு வா. ஆனால் எனக்கு நீ வாக்குக் கொடுத்திருப்பதை மறந்து விடாதே. இதே இடத்தில் தீபத்தையும் சுவடிகளையும் வைத்துக் கொண்டு நாளைக்கு இரவு உனக்காக நான் காத்திருப்பேன்” என்று கூறி அவன் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தார் அருட்செல்வ முனிவர்.

குலபதி அவர்களை வழியனுப்புவதற்குச் சங்கு வேலித்துறை வரை உடன் வந்திருந்தான். அவர்கள் பூம்புகாரிலிருந்து புறப்பட்டு வந்திருந்த பழைய கப்பல் மாலையிலேயே மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தது. மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும் மாலையில் அந்தக் கப்பலிலேயே புறப்பட்டுப் போயிருக்க வேண்டுமென்றும் தோன்றியது. சங்குவேலித் துறையிலிருந்து மணிபல்லவத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கீழை நாட்டு வாணிகக் கப்பல் ஒன்றில் இளங்குமரனும் வளநாடுடையாரும் இடம் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.

“ஐயா! நாளைக்கு நிலாப் புறப்படும் நேரத்திற்கே நான் இந்தத் துறையில் வந்து உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன். உங்கள் ஓவிய நண்பரையும் திரும்பி வரும்போது இங்கே உடனழைத்து வந்து விடுங்கள்” என்று விடை பெறும்போது குலபதி மனம் நெகிழ்ந்து கூறினான். அவனுடைய வார்த்தைகளில் இப்போது உறவின் நெருக்கமும், உரிமையும் கலந்து தொனித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/44&oldid=1231782" இலிருந்து மீள்விக்கப்பட்டது