பக்கம்:மணி பல்லவம் 5.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

830

மணிபல்லவம்

மட்டும் அல்ல, கீழ்த்திசை நாடுகளின் அறிவுத்துறை வன்மைகளும், பண்பாட்டுப் பெருமைகளும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொள்வதற்கு இந்த நல்ல நாளும், இந்தத் தீவும் பன்னெடுங் காலமாகப் பயன்பட்டு வருகின்றன. இந்தத் தீவின் கரைகளில் அலைகள் ஒலிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே கீழை நாடுகளில் விதம் விதமான தத்துவங்களும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன. நம்மைப் போன்றவர்கள் தலைமுறை தலை முறையாகச் சந்தித்துக் கொள்ளவும், ஒரு பெரிய அறிவுப் பரம்பரை தொடர்ந்து சங்கமமாகிப் பெருகவும் இந்தத் தீவும் இந்த நாளும் இடமாயிருந்து வருகின்றன. விசாகை இந்த முறை புத்த பூர்ணிமைக்காக இங்கு வந்து இறங்கிய விநாடியிலிருந்து என்னிடம் உன்னைப் பற்றியே நெடு நேரமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். திருநாங்கூரடிகள் என்னுடைய நெருங்கிய நண்பர். சமயவாதத்தில் நானும் அவரும் கடுமையாக எதிர்த்து நின்றிருக்கிறோம். அவர் என்னைப் பலமுறை வென்றிருக்கிறார். அவருக்கு நான் தோற்றிருக்கிறேன். ஆனால் நட்புச் செய்வதில் இருவருமே ஒருவருக்கொருவர் சிறிதும் தோற்றதில்லை. நீ அவருக்கு மிகவும் பிரியமான மாணவன் என்று விசாகையிடம் கேட்டறிந்தபோது என் மனம் பூரித்தது. உலகில் நீ வாழும் நாட்கள் நிறைந்து பெருகுமாக” என்று அவனிடம் அன்பாக உரையாடி வாழ்த்தினார் அந்த முதியவர். அவன் அந்த முதுமைக்கும் ஞானத்துக்கும் தன் மனப்பூர்வமான பணிவையும் வணக்கங்களையும் செலுத்தினான்.

அன்றிரவு எல்லாரும் கோமுகிப் பொய்கைக் கரையிலிருந்த பெளத்த மடத்தில் தங்கினார்கள். களைப்பினாலும், பயணம் செய்த சோர்வினாலும் எல்லாரும் உறங்கிய பின்னும் விசாகையும் இளங்குமரனும் கோமுகிப் பொய்கைக் கரையில்போய் அமர்ந்துகொண்டு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புத்த ஞாயிறு என்பது என்னவென்பதை அழகிய முறையில் ஒரு தத்துவமாக அவனுக்கு விளக்கிச் சொன்னாள் விசாகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_5.pdf/48&oldid=1195179" இலிருந்து மீள்விக்கப்பட்டது