பக்கம்:மதன கல்யாணி-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மதன கல்யாணி

இங்கே இருக்கிறாள் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டீர் களா?” என்றாள். அதைக் கேட்ட மைனர் திடுக்கிட்டு முற்றிலும் திகைப்பும் வியப்பும் அடைந்து, என்ன பேசுவதென்பதை அறிய மாட்டாமல் சிறிது நேரம் தத்தளித்தபின், ‘ஆனால் இந்த பங்களாவுக்கு உன்னைத் தவிர வேறே எஜமானி இல்லையா?” என்று திரும்பவும் சந்தேகத்தோடு வினவ அதைக் கேட்ட அந்த அணங்கு புன்சிரிப்போடும், அடக்கிக் கொண்ட அதிருப்தியோடும் அவரை நோக்கி, “நான் கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்ன வார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது, என்னைப் பார்த்தால் இந்த பங்களாவுக்கு எஜமானியாய் இருக்கும் யோக்கியதை என்னிடம் இல்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது, எனக்குத் தெரியாமல் இந்த பங்களாவுக்கு வேறே யாராவது ஒர் எஜமானியை ஏற்படுத்தி விட்டீர்களா? இந்த வீட்டின் எஜமானிப் பட்டம் எனக்குக் கொடுக்க தங்களுக்கு மனம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, உண்மையில் நான்தான் எஜமானி. தவறுதலாக இங்கே வந்துவிட்டதைப் பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம். தங்களுக்கு எங்கே போக வேண்டும் என்பதைச் சொன்னால், என்னுடைய பெட்டி வண்டியிலேயே வைத்துக் கொண்டு போய்விடச் சொல்லுகிறேன்” என்று மிகவும் இனிமையாகக் கூற, அதைக் கேட்ட மைனர், அதற்குள் துணி வடைந்து, தனது ஏமாற்றத்தினால் ஏற்பட்ட சஞ்சலத்தையும் அதிருப்தியையும் அகற்றிக் கொண்டு, “பெண்ணே கோபித்துக் கொள்ளதே! உண்மையில் இதில் ஒரு தவறு நடந்து விட்டது. வேறொரு ஸ்திரீ இங்கே வசிக்கிறாள் என்று எனக்கு சிலர் தெரிவித்தார்கள். ஆனால் இப்போது எனக்குக் காட்சி கொடுத் திருக்கும் ஸ்திரி ரத்னம், நான் தேடிவந்த பெண்ணை விட அழகில் குறைந்தவள் அல்ல. இது எப்படி இருந்ததென்றால் சுவர்க்க லோகத்தில் நான் ஒரு பக்கத்துக்குப் போக நினைக்கிறேன்; அதே லோகத்தில் இன்னொரு பக்கத்தில் வந்து சேர்ந்து விட்டேன்; இதில் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, காரியம் ஆகிவிட்டது. ஆகையால், இதைப் பற்றி, உனக்காவது எனக்காவது ஆயாசமே வேண்டாம். நான் உன்னைத் தேடி வந்ததாகவே நினைத்துக் கொள்ளுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/110&oldid=646991" இலிருந்து மீள்விக்கப்பட்டது