பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 ம் அ.ச. ஞானசம்பந்தன்


இவ்வாறு எங்கு நோக்கினும் மன வேறுபாடு, இனப் பிரிவினை, ஒரே இனத்துள்ளும் பிற வேறுபாடுகள் என்றிருக்கும் நிலையைக் காணலாம். ஆகவே, சமயத்தால் வேற்றுமை, தூரத்தால் வேற்றுமை, எல்லையால் வேற்றுமை, ஒரே எல்லையில் ஒரே இடத்தில் வாழுகின்றவர்கள் இடையேயும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்களிடையேயும் அவர்கள் மேற்கொண்ட சமய அடிப்படைக் கொள்கையில் வேற்றுமை.

ஜெர்மனியைப் பொறுத்தமட்டில் ஐடியலிசம்' என்று சொல்கின்றார்கள். லூதரிலிருந்து வந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள் தங்களைக் குறிக் கோள் கொள்கையாளர் (ஐடியலிஸ்டு) என்று கூறிக் கொள்வர். தாங்களே மிகுதியான கடவுள் நம்பிக்கை யுடையவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனினும், இது ஐயத்திற்கிடமானது என்பதற்கு இரண்டு உலக மகா யுத்தங்களே சான்றாயமைவதனைக் காணுகின்றோம். அமெரிக்கர்க்கும் ஆங்கிலேயர்க்கும் அவ்வளவு தூரம் பழமையில் நம்பிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் புரட்சியின் அடிப்படையில் வந்த சமயத்தைப் பின்பற்றுகிறவர்கள். ஆங்கிலிகன் சர்ச் பழைய நம்பிக்கையை மாற்றியமைத்து அதன் மேலே எழுந்தது என்று சொல்லுவார்கள். ஆனால், மலைநாட்டவர்கள் தங்கட்கு இருக்கும் கடவுள் நம்பிக்கையளவு ஜெர்மானியர்க்கு இல்லையென்று பேசுகின்றார்கள். இவ்வாறு எங்கும் எப்பொழுதும் வேற்றுமை, வேற்றுமை, வேற்றுமை என்று வேற்றுமையே இந்தப் பரந்த உலகெங்கிலும் வளர்வதனைக் காணுகின்றோம். அப்படியானால்