உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

மனத்தின் தோற்றம்



விதிப் படலம் - 25-ஆம் பாடலில் உள்ள பகுதியாகும். மற்றும், கோதுமைக்குக் கோதி என்னும் பெயரும் உண்டு என்பதைத் திவாகர நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் உள்ளதைக் கண்டேன். “கோதி கோதுமை” என்பது, திவாகர நிகண்டு - மரப் பெயர்த் தொகுதியின் 173-ஆம் பாடலாகும். அடுத்து, “தழுவு கோதுமையே கோதி” என்பது, சூடாமணி நிகண்டு- மரப்பெயர்த் தொகுதி.39ஆம் பாடல் பகுதியாகும். இத்தனையும் யான் கொண்டு சென்ற நூல்களிலிருந்து பெறப்பட்டவையாகும். இனிச் செய்திக்கு வருவோம்:

யான் கிண்டல் செய்த தென் தமிழ் நாட்டுப் பேச்சு வழக்குப் பெயராகிய ‘கோதம்ப’ என்பது மலையாளத்தில் ‘கோதம்ப’ என்னும் எழுத்து வழக்காகும். எனவே, எனது கிண்டலில் பொருள் இல்லை. மற்றும், கோதுமைக்குக் ‘கோதி’ என்னும் பெயரும் உள்ளதாகத் தமிழ் நிகண்டுகள் கூறுகின்றனவே - அந்த வழக்கு, கன்னடத்திலும் ‘கோதி’ என உள்ளது. அடுத்து, பேச்சுத் தமிழில் உள்ள கோதும’ என்னும் கொச்சை வழக்கு, தெலுங்கில் ‘கோதும’ என எழுத்துத் தெலுங்காக உள்ளது. இத்தகைய அமைப்பு, நான்கு மொழிகட்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் சுவையான செய்தியன்றோ? இன்னும் இவ்வாறு பல்வேறு சொற்சுவைகளைக் காணலாம்.